சென்னை: தமிழ்நாட்டிற்கு வருகை தந்த பிரதமர் மோடி 5,200 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இந்நிலையில் திட்டங்களுக்கான துவக்க நிகழ்ச்சிகளை முடித்த பிறகு சென்னையிலிருந்து மைசூர் செல்ல இருந்த பிரதமரிடம் சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.
சென்னை மெட்ரோ:சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டத்திற்கான நிதியில் முதல் கட்டத்தைச் செயல்படுத்தியதைப் போல் மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் 50:50 என்ற பங்களிப்புடன் செயல்படுத்துவதற்கான கோரிக்கையை முன் வைத்தார்.
விமான நிலையங்கள்:விமான நிலையங்களின் விரிவாக்கத்திற்காக இந்திய அரசின் கீழ் செயல்படும் துறைகளுக்குச் சொந்தமான, பாதுகாப்புத்துறைக்குச் சொந்தமான நிலங்களை விமான நிலைய ஆணையத்திற்கு இலவசமாக வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
காலணி உற்பத்தி:காலணி ஏற்றுமதியாளர்களுக்கு உகந்த இடமாக இந்தியாவை மாற்றுவதற்கும், உற்பத்தியாளர்களின் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கும் புதிய உற்பத்தி சார்ந்த ஊக்கச்சலுகைத் திட்டத்தினை செயல்படுத்தக் கோரியுள்ளார்.
பி.எம்.மித்ரா பூங்கா: தமிழ்நாட்டில் மத்திய அரசின் பி.எம்.மித்ரா பூங்காவின் முதன்மை மேம்பாட்டாளராக சிப்காட்டினை நியமிக்கக் கோரிக்கை விடுத்தார்.
விளையாட்டு மேம்பாட்டிற்கு:தமிழ்நாட்டில் விளையாட்டு மேம்பாட்டிற்காக இந்திய விளையாட்டு ஆணையத்தின் மண்டல மையத்தை அமைக்க வேண்டும். ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளைத் தமிழ்நாட்டில் நடத்த வேண்டும். சர்வதேச அளவிலான பலவகை விளையாட்டுப் போட்டிகளைத் தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என கோரினார்.
அகல ரயில் பாதை: ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரை புதிய அகல இரயில் பாதை அமைக்கும் திட்டத்தை அப்பகுதியின் பலவீனமான சுற்றுச் சூழலை கருத்தில் கொண்டு அந்த திட்டத்தைக் கைவிடவேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை:தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சாதி பட்டியலில் ‘ன் (N)’ , ‘ க(GA)’ ,‘ட(DA)’, ‘க(KA)’ என முடிவடையும் பெயர்களை “ ர் R” என மாற்ற வேண்டும்.
கடலோர காற்றாலைகள்:தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களில் கடலோர காற்றாலை மின்சாரம் தயாரிப்பதற்கும், அவ்வாறு பெறப்படும் மின்சாரத்தில் 50 சதவீதத்தைச் சொந்த மாநிலத்திற்கு வழங்கவும், கடலோர காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரத்தை பவர்கிரிட் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (PGCIL) மின் கட்டமைப்பின் வழியே வழங்காமல் மாநிலத்தின் மின்தொடரமைப்பு (STU) மூலம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
சுங்க கட்டணம்:கப்பலூர், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடிகளை நகராட்சிக்கு வெளியே மாற்ற வேண்டும், 2 வழிச்சாலைகளுக்கு சுங்கக்கட்டணம் வசூலிப்பத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணத்தை 40 சதவீதமாகக் குறைக்க வேண்டும். நான்கு வழிச்சாலைகளில் பாலங்கள், தரைப்பாலங்கள், சேவைச்சாலைகள் அமைக்கும் வரை சுங்கக்கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
கச்சத்தீவை மீட்க வேண்டும்: பாக்வளைகுடா பகுதிகளில் மீனவர்களின் பாரம்பரிய மீன் பிடி உரிமைகளைப் பாதுகாத்து அவர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்வதற்குக் கச்சத்தீவை மீட்க வேண்டும்.
இலங்கைத் தமிழர்கள்:ஈழத் தமிழர்களுக்குச் சமமான குடிமுறை மற்றும் அரசியல் உரிமைகள் அளிப்பது தொடர்பாக இலங்கை அரசினை வலியுறுத்த வேண்டும். ஆகிய கோரிக்கைகளை முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி முதுமலை வருகை - வளர்ப்பு யானைகள் முகாமை பார்வையிடுகிறார்!