சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், இன்று விழுப்புரத்தில் இஸ்லாமிய நபர் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர், "விழுப்புரத்தில் இஸ்லாமிய நபர் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்தது பற்றிய அந்தச் செய்தியை, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர் சிவக்குமாரும் இந்த அரசினுடைய கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய சரகம், G.R.P தெருவைச் சேர்ந்தவரும், எம்.ஜி ரோட்டில் பழக்கடை நடத்தி வருபவருமான ஞானசேகர் என்பவருக்கு சாந்தி என்ற மனைவியும், ராஜசேகர், வல்லரசு என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், ஞானசேகருக்கு வேறோரு பெண்ணிடம் தொடர்பு இருப்பதாகவும், அதனால் பழக்கடையில் வரும் வருமானத்தைக் குடும்பத்திற்குத் தருவதில்லை என்றும், சாந்தி தனது மகன்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, நேற்று (29-3-2023) அன்று மாலை, ராஜசேகர் மற்றும் வல்லரசு ஆகியோர் தனது தந்தையிடம் இதுகுறித்துக் கேட்க பழக்கடைக்குச் சென்றபோது, அங்கு அவர் இல்லாததால், அங்கிருந்தவர்களிடம் கேட்டு பிரச்சினை செய்திருக்கிறார்கள். அப்போது அப்பிரச்சனையில் தலையிட்ட இப்ராஹிம் என்பவரை வல்லரசு மற்றும் ராஜசேகர் ஆகியோர் கத்தியால் குத்தி, காயம் ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. இச்சம்பவத்தில் காயம்பட்ட இப்ராஹிம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லக்கூடிய வழியில் உயிரிழந்திருக்கிறார்.