தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டு மாணவர் மீது தாக்குதல்; முதலமைச்சர் கண்டனம் - முதலமைச்சர் ஸ்டாலின்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி என்னும் அமைப்பினரால் தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Chief Minister Stalin has condemned the attack on Tamil Nadu students in JNU University
ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்

By

Published : Feb 20, 2023, 3:30 PM IST

சென்னை: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று (19.02.23) இரவு ஏபிவிபி (ABVP) அமைப்பினரால் தமிழ்நாட்டு மாணவர்கள் திட்டமிட்டு தாக்கப்பட்டுள்ளனர். பெரியார் படங்கள் உடைக்கப்பட்டன, சில இடங்களில் கிழித்தெறியப்பட்டன. ஏபிவிபி (ABVP) கும்பலின் அராஜகத்தைத் தட்டிக் கேட்ட தமிழ்நாட்டு மாணவர் தமிழ் நாசர் கடுமையாகத் தாக்கப்பட்டார்.

சில நாட்களுக்கு முன்பு பெரியாரிய ஆதரவு மாணவர் பிரவீன் இதே ஏபிவிபி (ABVP) கும்பலால் தாக்கப்பட்டு கால் உடைந்த நிலையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாணவர்கள் JNU-வில் தொடர்ச்சியாக சமூக நீதிக்காக குரல் கொடுப்பவர்கள். மேலும் சமூக நீதிக்கான மாணவர் அமைப்பை நடத்தி வருகிறார்கள். காட்டாறு குழுவின் "Reservation Rights" இந்தி, ஆங்கில நூல்களை டெல்லியிலுள்ள எல்லா உயர்கல்வி நிறுவனங்களிலும் பரப்புவதில் தீவிரமாக இயங்குபவர்கள்.

பல்கலைக்கழகத்திலேயே பெரியார் பிறந்தநாள், சட்ட எரிப்பு மாவீரர் நாள், புதுக்கோட்டை வேங்கைவயல் வன்கொடுமைகளை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் என தொடர்ந்து இயங்கியவர்கள் இவர்கள். தமிழ்நாட்டு மாணவர்கள் குறிவைத்துத் தாக்கப்படுவது பற்றி ஏற்கனவே காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. பல்கலைக்கழக நிர்வாகமும் ஆர்.எஸ்.எஸ், ஏபிவிபி அமைப்புகளுக்கு ஆதரவாகவே இயங்குகிறது என்றே கூறலாம்.

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப் பதிவில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். "பல்கலைக்கழகங்கள் வெறும் பாடம் கற்றலுக்கு மட்டுமல்ல; கலந்துரையாடல், விவாதம், மாறுபட்ட கருத்துகளுக்குமான இடங்கள் ஆகும். மேலும் புது டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களைக் கோழைத்தனமாகத் தாக்கியதோடு, தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ் போன்ற பெருந்தலைவர்களின் படங்களையும் அடித்து நொறுக்கியுள்ள ABVP அமைப்பினரின் செயலுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதோடு பல்கலை நிர்வாகம் இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோருகிறேன்.

தங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிற, ஒன்றிய பா.ஜ.க அரசை விமர்சிக்கிற மாணவர்கள் மீது வன்முறை வெறியாட்டம் கட்டவிழ்த்து விடப்படும் போதெல்லாம் #JNU பல்கலைக்கழகப் பாதுகாப்பு பணியாளர்களும், டெல்லி காவல்துறையும் கண்மூடி வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள்.

தாக்குதலுக்குள்ளான மாணவர்களுக்கு ஆதரவாக என் உறுதிப்பாட்டைத் தெரிவித்துக்கொள்வதுடன், தாக்குதல் நடத்திய கயவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தமிழ்நாட்டு மாணவர்களைப் பாதுகாக்குமாறு பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்", எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அசாதுதீன் ஓவைசியின் டெல்லி வீட்டில் மர்ம நபர்கள் கல்வீச்சு!

ABOUT THE AUTHOR

...view details