தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்வியும் மருத்துவமும் சேவைத் துறையாகவே செயல்பட வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின் - முதலமைச்சர் ஸ்டாலின்

முத்தமிழ் பேரவையில் நடைபெற்ற காது, மூக்கு, தொண்டை, தலை, கழுத்து அறிவியல் மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் துவங்கி வைத்து பேசினார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 29, 2023, 6:04 PM IST

கல்வியும் மருத்துவமும் சேவைத் துறையாகவே செயல்பட வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ்ப் பேரவை அரங்கில் தமிழ்நாடு காது, மூக்கு, தொண்டை மருத்துவ கூட்டமைப்பின் சார்பில் தமிழில் முதல் முறையாக நடத்தப்படும் "காது, மூக்கு, தொண்டை, தலை மற்றும் கழுத்து மருத்துவ அறிவியல் மாநாட்டை'' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்து , மாநாட்டு மலரை வெளியிட்டு பேசும்போது, "காது - மூக்கு - தொண்டை - தலை - கழுத்து மருத்துவ அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றக்கூடிய வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த மாநாடு முழுக்க முழுக்க தமிழில் நடைபெற இருக்கிறது என்பது, முதல் மகிழ்ச்சியாக அமைந்திருக்கிறது. தமிழ் என்று சொல்லுகிற போது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அடிக்கடி குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். தமிழைப் பற்றி பெருமையோடு சொல்லுகிறபோது அவர் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். தமிழைத் தமிழே என்று அழைக்கக்கூடிய சுகம் வேறு எதிலும் கிடையாது.

அழகுத் தமிழ்மொழியில் இந்த மாநாடு நடைபெறுவது உள்ளபடியே பாராட்டுக்குரியது. பொதுவாக இதுபோன்ற மாநாடுகள் எல்லாம் ஆங்கிலத்தில் தான் நடக்கும். அதுவும் கோட்-சூட் அணிந்துகொண்டு தான் வருவார்கள். ஆனால், இந்த மாநாட்டில் அதிலும் குறிப்பாக இந்த மாநாட்டை நடத்தக்கூடிய மோகன் காமேஸ்வரன் எப்படி இருக்கிறார் என்று பார்க்கிறீர்கள், வேட்டி, சட்டையோடு வந்திருக்கிறார்.

இதுபோன்ற மாநாடுகள் எல்லாம் ஒரு பெரிய ஸ்டார் ஹோட்டலில், பெரிய அரங்குகளில் தான் நடக்கும். ஆனால், இந்த மாநாட்டைப் பொறுத்தவரைக்கும், முதல்முறையாக முத்தமிழ்ப் பேரவையில் நடக்கிறது. அதுவும், இந்த முத்தமிழ்ப் பேரவையை யார் தொடங்கி வைத்தார்கள் என்றால், கருணாநிதி தான்.

முத்தமிழ்ப் பேரவையில் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. ஆனால், இன்றுதான் முதன்முதலில் தமிழ் மருத்துவ விழா இந்த முத்தமிழ்ப் பேரவையில் நடைபெறுவது என்பது உள்ளபடியே பெருமைக்குரிய ஒன்று. கருணாநிதி இன்றைக்கு இருந்திருந்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருப்பார், பெருமைப்பட்டிருப்பார் என்பதைத்தான் எண்ணிப் பார்க்கிறேன். டாக்டர் மோகன் காமேஸ்வரன் எனக்கும் அவர் மருத்துவர் தான். எனக்கு மட்டுமல்ல - கருணாநிதிக்கும் அவர் தான் மருத்துவர். குடும்பத்திற்கும் அவர்தான் மருத்துவர்.

சைனஸ் பிரச்னைக்கு சிகிச்சை:இந்த நேரத்தில் அவருடைய தந்தை டாக்டர் காமேஸ்வரனை நான் நினைத்துப் பார்க்கிறேன். அவரிடத்திலும் நான் காது, மூக்கு, தொண்டை சிகிச்சைக்காகப் பலமுறை சென்றிருக்கிறேன். அதிலும் குறிப்பாக, இந்தியாவில் நெருக்கடி நிலை ஏற்பட்டு 1976ஆம் ஆண்டு நம்முடைய ஆட்சி தமிழ்நாட்டில் கலைக்கப்பட்டு, மிசா சட்டம் வந்து அந்த மிசா சட்டத்தின்கீழ் கைதாகி சிறையில் இருக்கக்கூடிய நிலை எனக்கு ஏற்பட்டது. ஒரு வருடம் இருந்தேன்.

நான் அந்தப் பிரச்னைக்கு அதிகம் போக விரும்பவில்லை. அப்படி சிறையில் இருந்தபோது எனக்கு E.N.T. பிரச்னை வந்தது, சைனஸ் பிரச்னை வந்தது. அப்போது சிகிச்சைக்காக சென்னை அரசுப் பொது மருத்துவமனைக்கு என்னைக் காவலர் பாதுகாப்போடு அழைத்துக் கொண்டு செல்வார்கள். அவர் இருக்கக்கூடிய கட்டடத்திற்கு காவலர் பாதுகாப்போடு கொண்டு செல்வார்கள்.

நான் சிறையிலிருந்து பொது மருத்துவமனைக்கு வரக்கூடிய செய்தி என்னுடைய தாய்க்கு தெரிந்து, என்னுடைய தாய், தங்கை, தம்பி என்னுடைய வீட்டிலிருந்து பலபேர் புறப்பட்டு என்னைப் பார்க்க வருவார்கள். மருத்துவமனைக்கு வரும்போது பார்க்கலாம் என்ற ஆர்வத்தோடு வருவார்கள். வரும்போது கையில் சிறிது சூப்-ஐயும் எனக்குக் கொடுப்பதற்காக என்னுடைய தாயார் எடுத்துக் கொண்டு வருவார்கள்.

காவலர்களுக்குத் தெரியாமல் குடித்த சூப்: சில நேரங்களில் சில காவலர்கள் தாராளமாக விட்டுவிடுவார்கள். ஆனால், சில காவலர்கள் விடமாட்டார்கள், மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள். அது அவர்களது கடமை. அப்படிப்பட்ட நேரங்களில், டாக்டர் காமேஸ்வரனை பார்ப்பதற்கு நான் அந்த அறைக்குச் செல்கிறபோது காவலர்களும் உள்ளே வருவார்கள்.

நோயாளியை நான் தனியாகப் பார்க்க வேண்டும், நீங்கள் வெளியில் இருங்கள் என்று காவலர்களை வெளியில் நிற்க வைத்துவிடுவார். அதற்கப்புறம் இவருடைய தனி அறை பின்புறம் இருக்கும். அங்கு என்னுடைய அம்மா இருப்பார்கள், அவர்களை அழைத்து சூப்-ஐக் கொடுங்கள் என்பார், அதையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உடல் நலிவுற்றிருந்த நேரத்தில், பல மருத்துவர்கள் தலைவருக்குப் பக்கத்தில் இருந்து கண்காணித்துக் கொண்டு இருந்தார்கள். அதில் முக்கியமான ஒருவர் யார் என்று கேட்டீர்களேயானால், மோகன் காமேஸ்வரன் ஒருவராக இருந்தார். எதுவாக இருந்தாலும், நாங்கள் அவரிடத்தில்தான் கேட்போம். அவர்தான் கருணாநிதியின் உடல்நிலையைப் பற்றி அவ்வப்போது எங்களுக்குச் சொல்லிக்கொண்டே இருப்பார்.

அந்த நட்பு குறித்து கருணாநிதி மறைந்தபோது புகழ் அஞ்சலிக் கூட்டம் நடத்தினோம். தலைவருக்கு யார் யாரெல்லாம் மருத்துவம் பார்த்தார்களோ, அத்தனை மருத்துவர்களையும் அழைத்து புகழஞ்சலிக் கூட்டம் நடத்தினோம். அந்தக் கூட்டத்தில் மோகன் காமேஸ்வரன் பேசிய பேச்சு இன்றைக்கும் யாராலும் மறக்க முடியாது. எல்லோரையும் உருக வைக்கக்கூடிய வகையில் அவருடைய பேச்சு இருந்தது. அந்தளவுக்கு அவரது பேச்சு தாக்கத்தை ஏற்படுத்தியது; மிக உருக்கமான உரையாக அது அமைந்தது.

அவர் பேசும்போது சொன்னார், தனக்கும் கருணாநிதிக்கும் இருந்தது, 'டாக்டர் - நோயாளி உறவு' மட்டுமல்ல, 'தந்தை - மகன் உறவு' போல இருந்தது என்று அவர் பெருமையாக சொன்னார். அந்தளவுக்கு உணர்வுப்பூர்வமாக கருணாநிதியுடன் பழகியதால்தான், சமத்துவபுரத்தில் மாற்றுத்திறனாளிகளும் இடம் பெறுவதற்கான ஆலோசனையை மோகன் காமேஸ்வரனால் சொல்ல முடிந்தது.

காக்லீயர் அறுவைச் சிகிச்சை:அதேபோல், காதுகேளாத - வாய் பேசாத குழந்தைகளுக்கான 'காக்லீயர் அறுவை சிகிச்சையை' இலவசமாக அளிக்கும் திட்டம் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தவும் மோகன் காமேஸ்வரன் தான் காரணமாக அமைந்தார். அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கருணாநிதியிடத்தில் அதைப் பற்றி விளக்கமாக எடுத்துச்சொல்லி நடைமுறைப்படுத்த வைத்தவர். இதனால் பயன்பெற்ற ஐம்பது குழந்தைகளை, முதலமைச்சராக இருந்த கருணாநிதியிடத்தில் கோபாலபுரத்திற்கு அழைத்து வந்து, முதலமைச்சரிடத்தில் அவர்களை அறிமுகப்படுத்தினார். அன்றைக்கு கருணாநிதி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.

இதனை ஜெனீவா மாநாட்டில் சொல்லி, 2000 குழந்தைகளுக்குக் காது கேட்கிறது, பேசுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் கருணாநிதி என்று சொல்லி அவர் படத்தை போட்டுக் காண்பித்தவர் தான், மோகன் காமேஸ்வரன். இன்று இந்தத் திட்டம் மேலும் வளர்ந்து, 4 ஆயிரத்து 681 குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை, இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் இலவசமாக செய்யப்பட்டிருக்கிறது.

அரசியல்வாதிகளுக்கு தொண்டை முக்கியம்:பெரும்பாலான நோய்கள் பிறப்புக்குப் பிறகு வருபவைதான். ஆனால், செவித்திறன் குறைந்திருத்தல் போன்றவை சிலருக்கு பிறக்கும்போதே ஏற்படுகிறது. குழந்தைகளுக்குக் காது கேளாமை அதிகளவில் அதிகரித்து வருகிறது. இது ஜெனிட்டிக் - அதாவது மரபு வழிப் பிரச்னையாகவும் சொல்லப்படுகிறது.

சுற்றுச்சூழல் மாசு அடைதலும் இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. அதிலும் எங்களைப் போன்ற அரசியல்வாதிகளுக்கு கவிப்பேரரசு சொன்னதைப்போல, தொண்டை மிக மிக மிக முக்கியம். தொண்டை போய்விட்டால் தொண்டே போய்விடும். லேசாகத் தொண்டை கரகர என்று வந்துவிட்டால், உடனே டாக்டர் மோகனுக்குத்தான் நான் போன் செய்வேன், உடனே கிளினிக்குக்கு நான் சென்றுவிடுவேன். காது, மூக்கு, தொண்டை, கழுத்து இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய பிரச்னைகள். இது அனைவருக்குமான பிரச்னை என்கிற காரணத்தினால், தாய்மொழியில் இந்த மாநாடு நடத்தப்படுவது மிகமிக மிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது.

நிர்வாகத்தில் தமிழ், ஆட்சியில் தமிழ், பள்ளிகளில் தமிழ், கல்லூரிகளில் தமிழ், நீதிமன்றத்தில் தமிழ், கோயில்களில் தமிழ், இசையில் தமிழ் என 'எங்கும் தமிழ் - எதிலும் தமிழ்'. அண்ணா - கருணாநிதி வழியில் தமிழுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய அரசாக, முக்கியத்துவம் தருவதை வலியுறுத்தும் அரசாக நமது அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

மருத்துவ நூல்களை தமிழில் மொழிபெயர்த்து அரசின் சார்பில் நாங்கள் வெளியிட்டு இருக்கிறோம். தொழில் படிப்புகள் அனைத்தும் தாய்மொழியில் படிக்க வழிவகை செய்ய அனைத்து நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் பணியையும் தொடங்கி இருக்கிறோம். மருத்துவம் என்பது எளிமையானதாக - புதுமையானதாக - அதே நேரத்தில் அதிக செலவு இல்லாததாகவும் அமைய வேண்டும். அது குறித்து இந்த மாநாடு அதிகம் சிந்திக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

மருத்துவம் நவீனமாகி வருகிறது. ஆனால், அதிகத் தொகை செலவழிக்க வேண்டியதாகவும் இருக்கிறது. நவீன மருத்துவ வசதிகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் வழங்குகிறோம். மருத்துவக் காப்பீடு திட்டங்களின் மூலமாக வழங்குகிறோம். மக்களைத் தேடி மருத்துவம் - நம்மைக் காக்கும் 48 திட்டங்களின் மூலமாக தருகிறோம்.

என்றாலும் அதிகப்படியான மக்கள் தொகை கொண்டிருக்கக்கூடிய இந்த நாட்டில், அனைத்து தேவைகளையும் சேவைகளையும் அரசு மருத்துவமனைகள் மட்டும் வழங்கினால் அது போதாது. இதில் தனியார் பங்களிப்பும் மிகமிக முக்கியமாக இருக்கிறது. அப்படி தனியார் மருத்துவமனைகள் பங்களிப்பு செய்யும்போது கட்டணம் என்பது ஏழைகளுக்கு உதவுவதாக அமைய வேண்டும்.

கல்வியும் மருத்துவமும் சேவைத் துறைகள். சேவைத் துறையாகவே செயல்பட வேண்டும். உலகில் திறமையான மருத்துவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். சென்னைக்கே மெடிக்கல் சிட்டி, மெடிக்கல் கேப்பிட்டல் என்றுதான் பெயர். எத்தகைய நோயையும் குணப்படுத்தக்கூடிய வசதி எல்லாமே இங்கு உண்டு. அந்த வகையில் மருத்துவத் துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டு இருக்கிறது” எனப் பேசினார்.

இதையும் படிங்க: வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கமா.? அனுமதிக்கக் கூடாது.. - அன்புமணி இராமதாஸ்

ABOUT THE AUTHOR

...view details