இந்திய நூலகத் தந்தை என்று போற்றப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர்.எஸ்.ஆர். அரங்கநாதனின் நூலகப்பணிகளைப் போற்றும் வகையில் சிறப்பாகப் பணிபுரியும் அரசு பொது நூலக நூலகர்களுக்குத் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் ‘டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருது’ வழங்கப்பட்டுவருகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (நவ. 25) நடைபெற்ற நிகழ்வில் 2020ஆம் ஆண்டிற்கான டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருதிற்குத் தெரிவுசெய்யப்பட்ட 33 நூலகர்களுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருது வழங்கி கௌரவித்தார்.
இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு பொது நூலகங்களில் அதிக உறுப்பினர்களையும், புரவலர்களையும் இணைத்து, பொது நூலகங்களின் தரத்தை மேம்படுத்தி, சிறப்பாகச் சேவையாற்றிவரும் நூலகர்களை கௌரவிக்கும் வகையிலும், நூலகர்களின் பணியினை ஊக்குவிக்கும்பொருட்டும் 2001ஆம் ஆண்டுமுதல் 2011ஆம் ஆண்டுவரை நவம்பர் மாதம் நடைபெறும் நூலக வார விழாவின்போது ‘நல்நூலகர் விருது’ வழங்கப்பட்டுவந்தது.
இதனிடையே, 2012ஆம் ஆண்டுமுதல் அவ்விருதின் பெயர் மாற்றம்செய்யப்பட்டு, இந்திய நூலகத் தந்தை எனப் போற்றப்படும் டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதனின் நினைவைப் போற்றும் வண்ணம் டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருது என்னும் பெயரில் வழங்கப்பட்டுவருகிறது.
அந்த வகையில், 2020ஆம் ஆண்டிற்கான டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருதிற்குத் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து 33 நூலகர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.
அவர்களுக்கு வழங்கும் அடையாளமாக, த.கோமதி (சென்னை), ந. செசிராபூ (அரியலூர்), இரா. தாமோதரன் (கோயம்புத்தூர்), மு. அருள்ஜோதி (கடலூர்), சொ. ஆதிரை (தருமபுரி), வே. பாஸ்கர் (திண்டுக்கல்), கு. சதாசிவம் (ஈரோடு), தி. சுந்தரமூர்த்தி (காஞ்சிபுரம்), செ. ஜெரால்டு (கன்னியாகுமரி) ஆகிய ஐந்து நூலகர்களுக்குத் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் இன்று விருது வழங்கப்பட்டது.
நூலகர்களுக்கு டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருதிற்கான நற்சான்றிதழ்கள், வெள்ளிப்பதக்கங்கள், ஐந்தாயிரம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
33 அரசு பொது நூலகர்களுக்கு டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருதினை வழங்கி முதலமைச்சர் கெளரவிப்பு! இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா. வளர்மதி, தலைமைச் செயலர் சண்முகம், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் தீரஜ் குமார், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் உறுப்பினர் செயலர் மற்றும் பொது நூலக இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) முனைவர்.எஸ். நாகராஜ முருகன் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க :செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்க உத்தரவு