2020ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், நாட்டு மக்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ள 2020-21ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததற்காக மத்திய நிதியமைச்சர் அவர்களை நான் பாராட்டுகிறேன்.
இந்த நிதி நிலை அறிக்கை உள்கட்டமைப்பு, விவசாயம், பாசன வசதி, ஊரக வளர்ச்சி மேம்பாட்டை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளதை நான் வரவேற்கிறேன். இந்த நிதிநிலை அறிக்கையில் நமது நாட்டில் நீர்ப் பற்றாக்குறை அதிகமாக நிலவக்கூடிய 100 மாவட்டங்களுக்கு சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதை நான் வரவேற்கின்றேன்.
நீர்ப் பற்றாக்குறையால் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகும் தமிழ்நாட்டிற்கு இத்திட்டத்தின் கீழ், இப்பிரச்னை நிலவும் அனைத்து மாவட்டங்களும் தேர்வு செய்யப்பட்டு, அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டுமென நான் கேட்டுக் கொள்கிறேன்.
அதேபோன்று, நீர்ப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு தரிசாக விடப்பட்டுள்ள விளைநிலங்களில் சூரிய மின் உற்பத்தி செய்வதற்கான முயற்சி வரவேற்கத்தக்கது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதிலும், குற்றச் சம்பவங்களைக் குறைப்பதிலும் நமது நாட்டிற்கே முன்னோடியாக தமிழ்நாடு தொடர்ந்து விளங்குகின்றது.
இதனைக் கருத்தில் கொண்டு இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய காவல் பல்கலைக்கழகம், தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஒன்றினை தமிழ்நாட்டில் அமைத்திட வேண்டுமென நான் கேட்டுக் கொள்கிறேன்.
நீர்ப்பாசனம், விவசாயத் துறைகளுக்கு 2 லட்சத்து 83ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதை நான் பாராட்டுகிறேன். மீன் உற்பத்தி இலக்காக 2022-23ஆம் ஆண்டிற்கு 200 லட்சம் டன்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதையும், பால் உற்பத்தி திறனை 2025 ஆம் ஆண்டிற்கு இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளதையும் நான் மனதார பாராட்டுகிறேன்.
மத்திய நிதி அமைச்சர் தனது நிதிநிலை அறிக்கையில் ஆதிச்சநல்லூர் உள்பட ஐந்து தொல்லியல் சார்ந்த இடங்களில் அருங்காட்சியகம் கொண்ட மேம்பாட்டு பணிகள் செய்வதாக அறிவித்துள்ளதை தமிழ்நாட்டின் சார்பாகவும், தமிழ்நாட்டின் மக்களின் சார்பாகவும் மத்திய அரசிற்கு நன்றி சொல்லும் அதே வேளையில், கீழடியையும் இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கும்படி நான் கேட்டுக் கொள்கிறேன்.
நமது நாட்டில் மின்னணு சாதனங்கள், திறன்பேசி உற்பத்தியை மேலும் உயர்த்துவதற்காக இத்தொழிற்சாலைகளை அமைக்கும் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருப்பது புதிய உற்பத்தி நிறுவனங்கள் தொடங்குவதற்கு வழிவகுக்கும் என நான் நம்புகிறேன்.
மேலும்,தொழில்நுட்ப ஜவுளி வகைகள் உற்பத்தியை தரம் உயர்த்திட ஆயிரத்து480 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்துறையில் சிறந்து விளங்கும் சென்னை, திருப்பூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள உற்பத்தி நிறுவனங்களை சர்வதேசத் தரத்திற்கு இந்த நிதியுதவியால் உயர்த்திட முடியும்.