தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் வட்டம், அயப்பாக்கத்தில், 0.64 ஏக்கர் பரப்பளவில், தூண் தளம் மற்றும் 3 தளங்களுடன், 12 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அம்மா திருமண மண்டபத்தை முதலமைச்சர் பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்த புதிய திருமண மண்டபத்தில், தூண் தளத்தில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தும் வசதியும், முதல் தளத்தில் உணவு அருந்தும் அறையும், இரண்டாம் தளத்தில் சுமார் 630 நபர்கள் அமரக்கூடியமணவறை (Marriage Hall), மணமகள் மற்றும் மணமகன் அறைகளும், மூன்றாம் தளத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி படுக்கை அறையுடன் இணைந்த கழிவறை மற்றும் குளியலறை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மின்தூக்கி வசதி, ஆழ்துளை கிணறு, கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, மின்மாற்றி ஜென்செட், மையகுளிர், சாதன வசதி, சூரியமின்சக்தி வசதி, கண்காணிப்பு கேமராக்கள், வெளிப்புற மின் விளக்குகள், தீயணைப்பு வசதிகள், குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதிகள், சுற்றுச்சுவர், மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
அதேபோன்று சென்னை கொரட்டூரில் 0.98 ஏக்கர் பரப்பளவில் 13 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அம்மா திருமண மண்டபம், வேளச்சேரியில் 0.47 ஏக்கர் பரப்பளவில் 8 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அம்மா திருமண மண்டபம், சோழிங்கநல்லூர் பகுதி II–ல், சுயநிதி திட்டத்தின் கீழ், 23 ஆயிரத்து 189 சதுர அடி நிலப்பரப்பில். 10 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூண் தளம் மற்றும் 4 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள 32 மத்திய வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் 45 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 அம்மா திருமண மண்டபங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றை முதலமைச்சர் பழனிசாமி இன்று(நவ.24) திறந்து வைத்தார்.
இதையும் படிங்க:குளம்போல் நிரம்பிய ஓடுபாதை : தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள்!