சென்னைதலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் திருவள்ளூர், கடலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் 3 கோடியே 12 இலட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டுள்ள 3 பெரியார் நினைவு சமத்துவபுரங்கள், கடலூர், திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 34 கோடியே 76 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 5 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள், 2 ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக வளாகக் கட்டடங்கள் மற்றும் ஒரு புதிய பேருந்து நிலையம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டுள்ள 3 பெரியார் நினைவு சமத்துவபுரங்கள், ரூ.34.76 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 5 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள், 2 ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக வளாகக் கட்டடங்கள் மற்றும் ஒரு புதிய பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் திட்டங்கள் குறித்து விளக்கினார்.
இதுகுறித்து அரசின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், 'தந்தைப் பெரியாரின் சமூக சமத்துவ கொள்கையை செயல்படுத்தும் பொருட்டும், அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையாகவும், சகோதரத்துவத்துடனும் வாழவேண்டும் என்ற நோக்கத்துடனும் “பெரியார் நினைவு சமத்துவபுரம்” மறைந்த முதலமைச்சர் கருணாநிதி அவர்களால் 1997ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
அதன்படி, 1997 - 2001 வரையில் 145 சமத்துவபுரங்கள் மற்றும் 2008-2011 வரையில் 93 சமத்துவபுரங்கள், என மொத்தம் 238 சமத்துவபுரங்களை அமைக்க ஆணையிடப்பட்டு, 233 சமத்துவபுரங்கள் கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
மீதமுள்ள 5 சமத்துவபுரங்களில், ஒரு சமத்துவபுரம் பணி முடிக்கப்படாத நிலையிலும், 4 சமத்துவபுரங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படாத நிலையிலும் கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வந்தது. அதன் தொடர்ச்சியாக, விழுப்புரம் மாவட்டம், வானூர் ஊராட்சி ஒன்றியம், கொழுவாரி ஊராட்சியில் அமைக்கப்பட்ட சமத்துவபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், கண்ணமங்கலப்பட்டி ஊராட்சியில் அமைக்கப்பட்ட சமத்துவபுரம் ஆகிய இரண்டு சமத்துவபுரங்களும் முற்றிலுமாக சீரமைப்பு செய்யப்பட்டு, முன்னதாகவே முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.
இது மட்டுமின்றி வேளாண்மை - உழவர் நலத் துறை சார்பில் ரூ.68.83 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை ஸ்டாலின் திறந்து வைத்தார். பிறகு வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் 68 கோடியே 82 இலட்சத்து 88 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள், துணை வேளாண்மை விரிவாக்க மையங்கள், முதன்மைப் பதப்படுத்தும் மையங்கள், சேமிப்புக் கிடங்குகள், சேமிப்பு வசதியுடன் கூடிய துணை ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கான கல்விசார் கட்டடங்கள் உள்ளிட்டப் பல்வேறு கட்டடங்களைத் திறந்து வைத்தார்.
வேளாண்மைத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்திடும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, விவசாயப் பெருமக்களை அழைத்து, அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்து வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து, உழவர்களின் நலனைப் பேணும் வகையில் வேளாண்மைத் துறை என்ற பெயரினை வேளாண்மை - உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றமும் செய்ததோடு வேளாண் பெருமக்களின் வருவாயினை பன்மடங்காக உயர்த்திடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
வட்டார அளவிலான சேமிப்புக் கிடங்குகளுடன் கூடிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்களானது, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனை, வேளாண் பொறியியல் மற்றும் விதைச் சான்று ஆகிய அனைத்து துறை அலுவலகங்களையும் உள்ளடக்கிய பொதுவான மையமாக செயல்படுகிறது.
இந்த மையங்கள் வாயிலாக தொழில்நுட்ப ஆலோசனைகள், இடுபொருள்கள் விநியோகம், ஒன்றிய மற்றும் மாநில அரசு திட்டங்களின் செயலாக்கம் ஆகிய அனைத்து செயல்பாடுகளும் ஒரே குடையின் கீழ் விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகின்றன.
இதுவரை, 193 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. உரமிடும் முறையினை ஊக்கப்படுவதற்காக “தமிழ் மண்வளம்” எனும் இணைய முகப்பினையும் இன்று முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மண்வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில், விவசாயப் பெருமக்கள் தங்கள் நிலத்தில் உள்ள மண்வளத்தினை அறிந்து, அதற்கேற்ப உரமிடுவதை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள “தமிழ் மண்வளம்” எனும் புதிய இணைய முகப்பினை இந்த நிகழ்வில் ஸ்டாலின் (http://tnagriculture.in/mannvalam) தொடங்கி வைத்தார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நமக்கு நாமே திட்டம்: விரைவில் நோயாளியின் பெற்றோர் தங்கும் விடுதி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்