சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(ஜூலை9) திராவிட இயக்க எழுத்தாளர் திருநாவுக்கரசு, தொ.மு.ச பேரவை துணை தலைவர் சபாபதி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவிற்கே இன்று பேராபத்து வந்துள்ளது, அதிலிருந்து இந்தியாவை காப்பாற்ற முயற்சித்து வருகிறோம்.
2014-ல் பாஜக அரசு பொறுப்பேற்கும் முன்பு கொடுத்த வாக்குறுதியை பாஜகவினர் நிறைவேற்றினார்களா?. தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் திட்டத்தை விமர்சிப்போர் அது குறித்து ஏன் கேள்வி எழுப்பவில்லை?. வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு வந்து ஒவ்வொரு தனி நபருக்கும் ரூ.15 லட்சம் வழங்குவேன் என்றாரே பிரதமர். 15 லட்சம் வேண்டாம், 15 ஆயிரமாவது வழங்கினாரா? இல்லை 15 ரூபாயாவது; வழங்கினாரா. கிடையாது. அதுகுறித்து அவர்கள் சிந்திக்கவோ , பேசவோ இல்லை.
வரும் 17, 18 ஆம் தேதிகளில் பெங்களூரில் எதிர்க்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளோம் எதிர்கட்சிகள் கூட்டத்தால் எரிச்சலடைந்துள்ள பிரதமர், தான் பிரதமர் என்பதையும் மறந்து ஏதேதோ பேசி , உளறி வருகிறார் என்றார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் விதமாக 2014ஆம் ஆண்டு மோடி பேசிய காணொளியை அண்ணாமலை அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் மூண்டு விட்டது போல் தெரிகிறது. ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த பின்னரும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஊழல் ஆட்சியை நடத்திவரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 2014ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு கொடுக்காத தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்ததாக பேசி வருகிறார்.
அவ்வளவு பணம் வெளிநாட்டில் ஊழல்வாதிகள் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று சொன்னாரே தவிர அந்த பணத்தை ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கி கணக்கில் செலுத்துவோம் என்று பிரதமர் மோடி சொல்லவில்லை. திமுகவினர் போன்ற ஊழல்வாதிகள் என்று பிரதமர் குறிப்பிடவில்லையே, தங்களுக்கு ஏன் இவ்வளவு பதட்டம்?. தங்கள் மருமகன் தான் முறைகேடான பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் வெளிநாட்டு வங்கிகளுடன் தொடர்பில் இருக்கிறாரே. உங்களுக்கு என்ன கவலை?
முதல்வரின் மகன் சம்பந்தப்பட்ட 1000 கோடி ரூபாய் நோபல் ஸ்டீல் ஊழல் பற்றி எப்போது விளக்கம் அளிக்கும், இந்த ஊழல் திமுக அரசு?. கடந்த 9 ஆண்டுகளில், 1.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது என்பதும் நமது நாட்டில் 11 கோடி விவசாய பெருங்குடி மக்களுக்கு வருடம் 6000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருவதும் ஊழல் திமுக அரசின் முதல்வருக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க :எச்சமிட்ட காகம் மீது இரக்கம் காட்டிய எடப்பாடி பழனிசாமி!