சென்னை :குற்றப் பின்னணி ஏதேனும் இருந்தால், அவை தொடர்பான வழக்குகளில் தன்னை நிரபராதி என்று சட்டப்பூர்வமாக நிரூபிக்கும் வரையில் அவர்களை வேட்பாளராகத் தேர்வு செய்ய நிச்சயமாகக் கூடாது என்பதை கழக நிர்வாகிகள் தவறாமல் மனதில் கொள்ள வேண்டும் என திமுக தலைவரும், முதமைச்சருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள மடலில், “உள்ளாட்சியில் வென்று, நல்லாட்சி தொடர்வோம். உள்ளாட்சி என்பது மக்களாட்சியான ஜனநாயகத்தின் ஆணிவேர். அது வலிவுடனும் பொலிவுடனும் இருந்தால்தான், அரசின் நலத்திட்டங்கள் நாளும் தழைத்து நன்குசெழித்து, கடைசிப் பகுதியில் உள்ள குடிமக்கள் வரை அவரவர்க்கான உரிமைகளையும் உற்ற நலன்களையும் பெறமுடியும்.
தமிழ்நாடு இப்போது, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறது. அதில் உறுதியான வெற்றி வியூகங்களுடன் திமுகவினர் ஒவ்வொருவரும் களத்தில் கருத்தொன்றி பணியாற்ற ஆர்வமுடன் ஆயத்தமாகியிருப்பீர்கள். தேர்தல் நடைபெறும் அனைத்து இடங்களிலும் பரவலாகவும் பாங்காகவும் சீராகவும் சிறப்பாகவும் அமைந்திட வேண்டும் என்பதே உங்களில் ஒருவனான என் விருப்பம், வேண்டுகோள், அன்புக் கட்டளை.
கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வது, தோழமை கட்சிகளுக்கான இடங்களைப் பகிர்ந்தளிப்பது, வாக்கு சேகரிப்பில் அனைவருடனும் ஒருங்கிணைந்து ஒரே நோக்கோடு செயல்படுவது என ஒவ்வொரு கட்டத்திலும் திமுக நிர்வாகிகள் கடமை உணர்வுடனும், மிகுந்த பொறுப்புடனும் செயலாற்றிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : உயர்கல்விக்கான வரைவு அறிக்கை பல்கலைக்கழக மானியக் குழு வெளியீடு