சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக பொறுப்பு வகித்த போது சென்னை மாநகரை அழகுபடுத்தும் நோக்கத்தில் சிங்கார சென்னை திட்டம் கொண்டு வரப்பட்டது. ஜவகர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிங்கார சென்னை திட்டத்துக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் இந்த பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் மீண்டும் பல்வேறு மக்கள் நலப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.
அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கனவு திட்டமான சிங்கார சென்னை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதன்படி அந்த திட்டம் சிங்கார சென்னை 2.0 வாக புதுப்பொலிவு பெற உள்ளது. இந்த திட்டத்தின்படி சென்னையை சர்வதேச தரத்துக்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, சென்னை மாநகரில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
சென்னை மாநகரை அழகாக மாற்றும் வகையில் பல்வேறு வித்தியாசமான அம்சங்களுடன் சிங்கார சென்னை 2.0 திட்டத்தை செயல்பட்டு மாநகராட்சி அலுவலர்கள் தயாராகி வருகின்றனர். நகர்ப்புற இடத்தை மறுவடிவமைப்பது, கலை கலாச்சாரம், கல்வி, விளையாட்டு, சுகாதாரம், போக்குவரத்து, கடற்கரை புனரமைப்பு மற்றும் இணையவழியில் அரசு என எட்டு பிரிவில், 23 திட்டங்கள் மாநகராட்சி செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனவுத்திட்டம் முக்கியமான திட்டங்கள், கடற்கரை பகுதிகளில் பல்வேறு இடங்களை தேர்வு செய்து அழகுபடுத்த திட்டம், ஐந்து கடற்கரை பகுதிகளை தேர்வு செய்து அங்கு பல்வேறு பணிகளை மேற்கொள்ள திட்டம், அண்ணாநகர் டவர் பூங்கா புதுப்பொலிவு, சென்னையில் தேவைப்படும் இடங்களில் கூடுதலாக மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் உருவாக்கம் , அறிவியல், பொறியியல், கணித பூங்காக்கள் ஏற்படுத்துதல், செல்லப் பிராணிகளுக்கான பூங்கா உருவாக்கம், அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் மாணவர்களின் உயர் கல்வியை மேம்படுத்தும் வகையில் ஸ்மார்ட் வசதிகள், எழும்பூர், கிண்டி ரயில் நிலையங்களில் சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் மேம்படுத்தல் என முக்கியமான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, அலுவலர்கள் மட்டத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். சிங்கார சென்னை திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகளை மேற்கொள்வதற்காக தேவைப்படும் செலவினங்கள் பற்றியும், நிதி ஆதாரங்கள் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு விரைவில் தமிழ்நாடு அரசிடம் தெரிவிக்கப்பட இருக்கிறது. சிங்கார சென்னை திட்டம் தொடர்பாக பொதுமக்களுடன் விரைவில் ஆலோசனை நடத்தவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: 'மாஸ்டர்' இந்தி ரீமேக்கில் சல்மான் கான்?