சென்னை: மேட்டூர் அணையிலிருந்து நேற்று மாலை முதல் 1,80,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாதிப்பிற்குள்ளாகும் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவிரி, கொள்ளிட கரையோர மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும், இம்மாவட்டங்களுக்கு விரைந்து சென்று உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அமைச்சர்களையும், கண்காணிப்பு அலுவலர்களையும் அவர் அறிவுறுத்தினார்.
இதன் தொடர்ச்சியாக, சென்னை எழிலகம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வளாகத்திலுள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்திற்கு முதலமைச்சர் வருகை புரிந்து வெள்ள நிலைமை மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.
அப்போது, கூடுதல் தலைமைச் செயலர், வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர், வெள்ள நிலைமை குறித்தும், மழை விவரம் குறித்தும், காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நபர்கள், நிலை நிறுத்தப்பட்டுள்ள மீட்புப் படைகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சருக்கு எடுத்துக் கூறினார்.
மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு!! மேட்டூர் மற்றும் அமராவதி அணையிலிருந்து தொடர்ந்து அதிக அளவு நீர் வெளியேற்றப்படுவதால், ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி, பொதுவான எச்சரிக்கை நடைமுறை (CAP – Common Alert Protocal) மூலம் 22.76 இலட்சம் செல்போன் பயனாளிகளுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது.
கன மழையின் போது தேடல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து ஈடுபடும் பொருட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2 குழுக்களும், நாமக்கல் மாவட்டத்தில் 1 குழுவும், ஆக மொத்தம் 66 வீரர்களைக் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையின் 3 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.
மேலும், திருச்சி, ஈரோடு, நாமக்கல், ஆகிய மாவட்டங்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 118 வீரர்களைக் கொண்ட 3 குழுக்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ள விவரங்களை முதலமைச்சர் கேட்டறிந்தார்.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பாக 49 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 10 மாவட்டங்களில் உள்ள இந்த 49 முகாம்களில் 1327 குடும்பங்களைச் சேர்ந்த 4035 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்திற்கு வருகை புரிந்த முதலமைச்சர், ஈரோடு மாவட்டம் நிவாரண முகாம், நாமக்கல் மாவட்டம் நிவாரண முகாம் மற்றும் திருச்சி மாவட்டம் நிவாரண முகாம் ஆகிய நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசி, அவர்களுக்கு அங்கு போதுமான உணவு, குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்டறிந்தார்.
மேலும், ஈரோடு, நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர்களிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கள நிலவரம் குறித்து கேட்டறிந்து, உரிய நிவாரண நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: ”இளைஞர்கள் எது உண்மை என்று அறிய நிறைய படிக்க வேண்டும்” - முதலமைச்சர் ஸ்டாலின்