சென்னை:தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கடலூரில் உள்ள காந்தி பூங்காவில் நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளின் திருவுருவச் சிலையை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக இன்று (நவ.02) திறந்து வைத்தார்.
தமிழகத்தின் புகழ்சால் பெருந்தகையாளர்கள், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு தமிழ்நாட்டிற்குப் பெருமைத் தேடித்தந்த அறிஞர் பெருமக்கள், சமூகநீதி மற்றும் விடுதலை உணர்வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பை தெரியப்படுத்தும் வகையிலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நினைவகங்கள், திருவுருவச் சிலைகள், அரங்கங்கள், நினைவுத் தூண்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கடலூர் மாநகராட்சியில் உள்ள காந்தி பூங்காவில் அமைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளின் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். தனது சிறுவயது முதல் சுதந்திர பற்று மிக்கவராகத் திகழ்ந்த அஞ்சலை அம்மாள், 1921-ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய போது அதில் கலந்து கொண்டு தனது பொது வாழ்க்கையைத் தொடங்கினார்.
சென்னையில் நடைபெற்ற ஆங்கிலேயப் படைத் தளபதி ஜேம்ஸ் நீல் சிலை அகற்றும் போராட்டம், கடலூரில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகம் மற்றும் அந்நிய ஆடை எதிர்ப்பு போராட்டம், 1940-ஆம் ஆண்டு நடைபெற்ற தனிநபர் சத்தியாகிரக போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றதற்காகச் சிறைத் தண்டனையும் அனுபவித்தார்.