தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மறைமலை அடிகளார் பேரன் சிவகுமாருக்கு பணி நிரந்தரம்

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்காலிகமாக பணியாற்றி வரும் மறைமலை அடிகளாரின் பேரன் சிவகுமாருக்கு பணி நிரந்தரம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

முதலமைச்சர் ஆணை
முதலமைச்சர் ஆணை

By

Published : Aug 3, 2021, 7:54 PM IST

சென்னை: இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "உயர்தனி செம்மொழியாம் தமிழை வடமொழி கலப்பின்றி தூய நடையில் எழுதியவரும், தனித் தமிழ் இயக்கத்தை தொடங்கி தமிழை செழுமையாக வளர்த்தவருமான மறைமலை அடிகளார் பற்றி நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

அத்தகைய சான்றாண்மை மிக்க மறைமலை அடிகளார் தமிழுக்கு ஆற்றிய அருந்தொண்டை சிறப்பித்து போற்றும் வகையில், கடந்த 1997 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அவரது படைப்புகள் அனைத்தையும் அரசுடைமையாக்கவும், அவரது குடும்பத்தினருக்கு காப்பு நிதியாக ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவித்தார்.

தமிழுக்கும் மறைமலை அடிகளாருக்கும் சிறப்பு செய்தது இத்தருணத்தில் நினைவு கூரத்தக்கது. இத்தகைய சூழ்நிலையில் தமிழறிஞர் மறைமலை அடிகளாரின் இளைய மகன் மறை பச்சையப்பன் தற்போது மிகவும் வறிய நிலையில் உள்ளதால், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு செலுத்த வேண்டிய பராமரிப்பு கட்டண நிலுவை தொகையை தள்ளுபடி செய்தும் வாழ்நாள் முழுவதும் பராமரிப்பு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களித்தும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல், மறை பச்சையப்பன் மகன் சிவகுமார் தற்போது உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொகுப்பூதியத்தில் தற்காலிக அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவரை பணி நிரந்தரம் செய்து முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஆன்லைன் ரம்மிக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து - உயர் நீதிமன்றம் அதிரடி

ABOUT THE AUTHOR

...view details