இதுதொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,"நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் என உங்கள் அன்பால் பொறுப்பேற்றுக் கொண்ட உங்களில் ஒருவன் எழுதும் வேண்டுகோள் மடல்.
தமிழ்நாட்டு மக்கள் அளித்த தெளிவான தீர்ப்பினால் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று தி.மு.கழகம் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்துள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்ற தோழமைக் கட்சியினர் சட்டப்பேரவை உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர். இந்த வெற்றி மகிழ்ச்சிக்குரியது என்றாலும் கொண்டாட்டத்திற்குரியதாக அமையவில்லை. காரணம், கரோனா இரண்டாவது அலை பரவலின் தாக்கத்தால், இந்தியாவின் பிற மாநிலங்களைப் போலவே தமிழ்நாடும் பேரிடரை எதிர்கொண்டுள்ளது.
நாளுக்கு நாள் நோய்த்தொற்று எண்ணிக்கை உயர்வதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும் பெரும் கவலையை அளிக்கிறது. அது மக்கள் மனங்களில் அச்சத்தை விளைவிக்கின்ற காரணத்தால், ஆட்சிப் பொறுப்பேற்கும் முன்பாகவே அரசு அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்தி, மக்களை நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கவும், பாதிக்கப்பட்டவர்கள் குணமடையவும் வேகமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. என் சிந்தை முழுவதும் இந்த எண்ணமே நெற்றிச் சுருக்கங்களை ஏற்படுத்துகிறது.
மே 7-ஆம் நாள், நம் தலைமையில் அமைந்த அரசு போர்க்கால அடிப்படையில் கரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மாண்புமிகு மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் உயரதிகாரிகளும் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள் - செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவத் துறையினரும் மக்கள் நலன் காப்பதில் அயராமலும் அர்ப்பணிப்புடனும் செயலாற்றி வருகின்றனர்.
முதலமைச்சர் என்ற முறையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நான் எழுதிய கடிதத்தில், நாள்தோறும் 500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழ்நாட்டிற்குத் தேவை என்பதை வலியுறுத்திக் கேட்டிருந்தேன்.
பிரதமர் விரைந்து அனுப்பிய பதிலில், உடனடியாக 419 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழ்நாட்டிற்குத் தருகிறோம் என உறுதியளித்தார். இது நம் தேவைக்கு ஏற்ப முழுமையான அளவு இல்லையெனினும், மாநில அரசின் கோரிக்கைக்கு உடனடியாக செவிமடுத்துச் செயலாற்றியுள்ளார், பிரதமர். அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தேவைப்படும் அளவிலான ஆக்சிஜனையும் விரைந்து அனுப்பிட ஆவன செய்வார் என நம்புகிறேன்.
தமிழ்நாட்டிலேயே ஆக்சிஜன் உற்பத்தியைப் பெருக்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்களும், துறை சார்ந்த உயரதிகாரிகளும் மேற்கொண்டுள்ளனர். தனியார் அமைப்புகளும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கி உதவுகின்றன. சில தினங்களுக்கு முன்பு, டி.வி.எஸ் மோட்டார் - சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் சீனிவாசன் சர்வீசஸ் அறக்கட்டளை 18 கோடி ரூபாய் மதிப்புள்ள 1600 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கி, மக்களின் உயிர் காத்திட உதவியுள்ளது.
உதவிக்கரம் நீட்டுவதில் உயிரனைய தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான நீங்கள் எப்போதுமே முன்கள வீரர்களாக நிற்பவர்கள். கரோனா முதல் அலையின்போது தொடர்ச்சியான ஊரடங்கினால் எளிய மக்களும் - மருத்துவ உதவி தேவைப்படுவோரும் நெருக்கடிக்குள்ளான நிலையில், தி.மு.கழகத்தின் சார்பில் 'ஒன்றிணைவோம் வா' என்ற செயல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. உதவி எண் வழங்கப்பட்டு, அதற்கு வரும் அழைப்புகளின் அடிப்படையில் தமிழ்நாடு தழுவிய அளவில் கழகத்தினர் ஆற்றிய அரும்பணி பலருக்கும் பேருதவியாக இருந்தது.
திமுக மருத்துவர் அணி சார்பிலும் முழுமையான அளவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மருத்துவ முகாம்கள், முகக்கவசம் - சானிடைசர் வழங்குதல், ஏழைகளுக்கு உணவு வழங்குதல், வீடு தேடிச் சென்று உதவுதல் எனக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி ஒன்றிய - நகர - பேரூர் கிளைக்கழகச் செயலாளர்கள், கழகத்தின் ரத்த நாளங்களாக விளங்கும் உடன்பிறப்புகள் என அனைவருமே தங்களை இப்பணியில் ஈடுபடுத்திக் கொண்டனர்.
தங்களுக்கு நோய்த்தொற்று ஆபத்து இருந்தும் இயன்ற அளவு பாதுகாத்துக் கொண்டு, மற்றவர்களுக்கு உதவிய தொண்டுள்ளத்தை உங்களில் ஒருவனான நான் என்றும் மறக்க மாட்டேன்.