சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் பெருநகர சென்னை மாநகராட்சியில் 227 நபர்களுக்கும், நகராட்சி நிர்வாக இயக்குநரகம், பேரூராட்சிகள் இயக்குநரகத்தில் 100 நபர்களுக்கும், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் 130 நபர்களுக்கும், என மொத்தம் 457 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.
மாநிலத்தின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்துதல், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதல், நகர்ப்புற வசிப்பிடங்களில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட பாதாள சாக்கடைத் திட்டம், மழைநீர் வடிகால் திட்டம், சாலை மேம்பாட்டுப் பணிகள், நகர்ப்புற ஏழைகளுக்கு குடியிருப்புகளை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மேற்கொண்டு வருகிறது.
முக்கியத்துவம் வாய்ந்த இந்துறையின் பணிகள் அனைத்தும் தொய்வின்றி நடைபெற இந்த துறையில் ஏற்கனவே பணியாற்றிய நபர்கள் அவர்கள் பணியில் இருக்கும் போது உயிரிழந்ததன் காரணமாக, கருணை அடிப்படையில் அவர்களின் வாரிசுகளுக்கு பணியினை வழங்குவது வழக்கம். அதன் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 227 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு சாலைப் பணியாளர்கள் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.