சென்னை: சென்னை மாநகராட்சியில் பல்வேறு பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுமேற்கொண்டார். மேலும் பழவந்தாங்கல் காவல் நிலையத்திற்கும் திடீர் விசிட் அடித்து ஆய்வு மேற்கொண்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர். சாலையில் ரூ.71.31 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள், போரூர் ஏரியில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதிய மதகு அமைத்தல் மற்றும் போரூர் ஏரி முதல் ராமாபுரம் ஓடை வரை கால்வாய் அமைக்கும் பணிகள், அசோக் நகர் 4வது நிழற்சாலை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் ரூ.7.60 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
போரூர் ஏரியில் தற்போது உபரி நீர் செல்லும் நிலங்கள் முழுவதும் குடியிருப்பு பகுதிகளாக மாறிவிட்டதாலும், ஏரியின் குறுக்கே புறவழிச்சாலை அமைக்கப்பட்டதாலும், ஏரியின் உபரி நீர் வெளியேறுவதற்கு வழியில்லாமல் போரூர் ஏரியின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கொளுத்துவான்சேரி, சீனிவாசபுரம், பரணிபுத்தூர், பட்டூர், மற்றும் அய்யப்பன்தாங்கல் கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த ஆண்டு பருவமழையின்போது மேற்கண்டப் பகுதிகள் பெரும் வெள்ளப்பாதிப்புக்கு உள்ளானது.
மேலும், வெள்ளப்பாதிப்பு அடையாமல் இருப்பதற்காக ரூ.100 கோடி மதிப்பீட்டில் போரூர் ஏரி பகுதியில் வெள்ளப்பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப் பணிகள், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில் போரூர் ஏரியில் நடைபெற்று வரும் புதிய மதகு அமைத்தல் மற்றும் போரூர் ஏரி முதல் இராமாபுரம் ஓடை வரை புதியதாக மூடிய வடிவிலான கால்வாய் அமைக்கும் பணிகளையும் இன்று ஆய்வு செய்தார்.