சென்னை:தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாடு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த இரண்டு நாள் மாநாட்டில் மாவட்ட நிர்வாகம், சட்ட ஒழுங்கு பிரச்சினை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் ஆகியோருடன் முதலமைச்சர் ஆய்வினை மேற்கொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 03.10.2023 மற்றும் 04.10.2023 அன்று சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் அமைச்சர்கள், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அலுவலர்கள், வனத்துறை அலுவலர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்வர். இந்த இரண்டு நாள் மாநாட்டில் மாவட்ட நிர்வாகம், சட்டம் ஒழுங்கு நிலை உள்ளிட்ட பல்வேறு பொருண்மைகள் குறித்து விரிவான ஆய்வினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மேற்கொள்வார்.
மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் விதமாக அரசு பல்வேறு புதிய அறிவிப்புகளையும், திட்டங்களையும் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களை ஆய்வு செய்யவும், அவற்றை மேலும் சிறப்பாக செயல்படுத்துவது குறித்து உரிய அறிவுரைகளை வழங்குவதற்கும் இந்த மாநாடு நடைபெற உள்ளது.
மேலும் ஆளுநரின் உரை, முதலமைச்சரின் செய்தி வெளீயிடு, 110 விதியின் கீழ் அறிவிக்கபட்ட அறிவிப்புகள், நிதி நிலை அறிக்கை, வேளாண் அறிக்கை, அமைச்சர்களினால் மானிய கோரிக்கையின் போது அறிவிக்கபட்ட அறிவிப்புகள் என இந்த அறிவிப்புகளின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களின் செயல்பாடுகளை மாவட்ட தலைவர்களின் மூலமாக அறிந்து கொள்வதற்கும். அவற்றை மேலும் விரைவாக செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து அறிவுரைகளை வழங்கவும் இந்த மாநாடு நடைபெறுகிறது.
மேலும் வரும் ஆண்டுகளில் மக்களின் தேவைகளை மாவட்ட ஆட்சி தலைவர்கள் வாயிலாக அறிந்து கொண்டு அதன் அடிப்படையில் திட்டங்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது" என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அண்ணாமலை பாதயாத்திரையில் புகுந்த காட்டெருமை!... அலறியடித்து ஓடிய பாஜகவினர்!