சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கக் கூடிய மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி மதுரையில் துவங்கப்பட்டது.
இந்நிலையில் சுமார் 1,14,000 குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் காலை சிற்றுண்டித் திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டது. அதற்கான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.