சென்னை:தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.8) கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில் புதுக்கோட்டை, ராணிப்பேட்டை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் 7 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மூன்று கிடங்குகளை திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து, திருப்பூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் 6 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள 2 கிடங்குகளுக்கு அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் 2021-22ஆம் ஆண்டிற்கான உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கையில், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில் 7.30 கோடி ரூபாய் செலவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கூடுதலாக 3 ஆயிரத்து 400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல், 2022-2023ஆம் ஆண்டிற்கான உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கையில், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில் ராணிப்பேட்டை மற்றும் திருமங்கலம் சேமிப்புக் கிடங்கு வளாகங்களில், காலியாக உள்ள இடத்தில் கூடுதலாக 3 ஆயிரத்து 400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய சேமிப்பு கிடங்குகள் கட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.