சென்னை: அறிஞர் அண்ணா சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு குரங்கு அம்மை நோய் பரிசோதனையை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேற்று (ஜூலை 16) ஆய்வு செய்தார்.
அதன் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "குரங்கு அம்மை நோய், விலங்குகளில் இருந்து மனிதனுக்கு பரவும் ஒரு வகையான வைரஸ் மூலமாக ஏற்படுகிறது. விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு, பாதிக்கப்பட்ட விலங்கு கடித்தல், பாதிக்கப்பட்ட விலங்குகளை கையாளுதல் போன்ற காரணங்களால் பரவுகிறது.
ஒரு மனிதனிடம் இருந்து இன்னொரு மனிதனுக்கு சுவாச காற்றில் நீர் திவளைகள் மூலமாகவோ, பாதிக்கப்பட்டவரின் உடல்திரவம் மூலமாகவோ, பாதிக்கப்பட்ட நபர்கள் அணியும் உடையை அணிவதன் மூலமாகவோ பரவும். குரங்கு அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தடிப்பு, கொப்பளம் போன்ற அறிகுறிகள் தென்படும்.
இந்நோயினால் பாதிக்கப்பட்ட மொத்த நபர்களில், ஐரோப்பிய நாடுகளில் இருந்து 86 விழுக்காட்டினரும், அமெரிக்க நாடுகளில் இருந்து 11 விழுக்காட்டினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக சுகாதார நிறுவனம் இந்நோய் பரவலை உலக அளவிலான மிதமான ஆபத்து நிலை என அறிவித்துள்ளது.
குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அறிதல் (Contact Tracing), பரிசோதித்தல், சிகிச்சை அளித்தல், கிருமி தடுப்பு நடவடிக்கை எடுத்தல் ஆகியவற்றில் பன்னாட்டு விமான நிலையங்களில் பணிபுரியும் சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களை பன்னாட்டு விமான நிலையம் மற்றும் துறைமுகங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்நோய் உள்ளதா என்று பரிசோதிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.