சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்துவதை தடுக்கக் கோரியும் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 12 மீனவர்களையும் 109 படகுகளையும் விடுவித்திடவும் உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் மருத்துவர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழ்நாடு மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 12 இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இலங்கைக் கடற்படையினரின் இத்தகைய செயலைக் கட்டுப்படுத்திடவும், மீனவர்களின் மீன்பிடிப் படகினை விடுவித்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் மருத்துவர் எஸ். ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ( ஏப்.6) கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ஏப்.5ஆம் தேதியன்று தமிழ்நாடு மற்றும் காரைக்காலைச் சேர்ந்த அப்பாவி மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளது.
காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஏப்.1ஆம் தேதி அன்று 12 மீனவர்களுடன் (தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 மீனவர்கள், புதுச்சேரி மாநில காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் ) IND-PY-PK-MM-969 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றதாகவும், 5-4-2023 அன்று அதிகாலை 1-00 மணியளவில் கிழக்குக் கோடியக்கரை பகுதியில் அவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்த நிலையில், அவர்கள்மீது இலங்கைக் கடற்படையினர் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.