தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக இணையதளத்தை தொடங்கிவைத்த முதலமைச்சர் - முதலமைச்சர் எடப்பாடி

சென்னை: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் 2 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

cm inauguration
cm inauguration

By

Published : Sep 21, 2020, 6:44 AM IST

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பு:

" தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் 2 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட https://www.tnskill.tn.gov.in இணையதளத்தை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன், தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனம், கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு பிரிவில் உயர்தர திறன் மேம்பாட்டு மையம் நிறுவிடவும், கோர்ஸெரா நிறுவனம், தமிழ்நாட்டில் 50,000 வேலையற்ற நபர்களுக்கு இணைய வழியில் இலவசமாக கல்வி மற்றும் பயிற்சி அளித்திடவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், மாநிலத்தின் திறன் பயிற்சிகளுக்கான ஒருங்கிணைப்பு முகமையாக செயல்படுவதுடன் தொழில் நிறுவனங்கள், தொழில் நிறுவன கூட்டமைப்புகள், பயிற்சி நிறுவனங்கள், துறை திறன் குழுமங்கள், மதிப்பீடு செய்யும் நிறுவனங்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் அமைப்புகள் ஆகிய திறன் தொடர்புடைய அனைவரையும் ஒருங்கிணைக்கிறது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்திடும் நோக்கில் தற்போது பயன்பாட்டில் உள்ள கழகத்தின் இணையதளம் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பன்மொழி திறனாய்வு மற்றும் மின்-ஆளுமை தளமாக (Multilingual Integrated Skill Analytics and E-governance System) மேம்படுத்தப்பட்டுள்ளது. அம்மேம்படுத்தப்பட்ட தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் https://www.tnskill.tn.gov.in என்கிற இணையதளத்தை முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.

இதன்மூலம், பயனாளர்களின் பதிவுகள், பயிற்சி வழங்கும் நிறுவனங்களின் அங்கீகாரங்கள், மதிப்பீட்டு முகமைகளின் பதிவுகள், பயிற்சி தொடர்பான கண்காணிப்பு மற்றும் மதிப்பீடுகள், இணையவழி சான்றிதழ்கள், ஆதார் எண் இணையப்பெற்ற வருகை பதிவேடு பராமரித்தல், பயிற்சி பெற்றவர்களது பணி அமர்த்தல் கண்காணிப்பு, இணையவழி பணப்பயன் ஒப்பளிப்பு போன்ற பணிகளை இவ்விணையத்தின் வாயிலாக மேற்கொள்ள இயலும்.

அத்துடன், ஒருங்கிணைந்த ஒற்றைத் திறன் பதிவு தொகுதியை (Unified Single Skill Registry) உருவாக்கும் நோக்கில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் பிற துறைகளின் விவரங்களை உள்ளடக்கியதாக இவ்விணையதளம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் உதவியுடன் தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டுத் திட்டம் - நிலை ஐஐ-ன் ஒரு பகுதியாக, 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு பிரிவில் உயர்தர திறன் மேம்பாட்டு மையம் நிறுவிட, முதலமைச்சர் முன்னிலையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும், தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அமெரிக்கா நாட்டின், கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கோர்ஸெரா (Coursera) நிறுவனம் உலகத்தரம் வாய்ந்த முன்னணி இணையவழி கற்றல் தளமாகும். இந்நிறுவனம், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், கூகுள், ஐபிஎம் போன்ற நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுடன் சேர்ந்து இணைய வழியில் பொறியியல், இயந்திர கற்றல், கணிதம், வணிகம், கணினி அறிவியல், டிஜிட்டல் சந்தைப்படுத்தல், மருத்துவம், உயிரியல், சமூக அறிவியல் மற்றும் பிற பாடங்களில் சான்றிதழ் மற்றும் பட்டப் படிப்புகளை வழங்கி வருகிறது. மேலும், இந்நிறுவனம் உலகெங்கிலும் உள்ள 80 நாடுகளில் திறன்களை வளர்க்கும் நோக்கில் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் 50,000 வேலையற்ற நபர்களுக்கு இணைய வழியில் இலவசமாக கல்வி மற்றும் பயிற்சி அளித்திடும் வகையில், முதலமைச்சர் முன்னிலையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்கும், கோர்ஸெரா நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம், வேலையற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் இந்நிறுவனம் வழங்கும் இணையவழி பயிற்சி வகுப்புகளால் வேலைவாய்ப்பு பெற வழிவகை ஏற்படும்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில், தலைமைச் செயலர் சண்முகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை கூடுதல் தலைமைச் செயலர் முகமது நசிமுதீன், உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்"

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details