தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் இன்று திறக்கப்படுகிறது - பொதுமக்கள் பார்வைக்கு தடை - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள, வேதா இல்லத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜன.28) திறந்து வைக்கிறார்.

jayalalithaa vedha house
jayalalithaa vedha house

By

Published : Jan 28, 2021, 9:38 AM IST

சென்னை போயஸ்கார்டனில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த, 'வேதா நிலையம்' வீட்டை நினைவு இல்லமாக மாற்றவேண்டும் என்ற பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இதையடுத்து, ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது என்று தமிழ்நாடு அரசு, அரசிதழ் வெளியிட்டது. நினைவு இல்லமாக மாற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்த நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட குழுவினர் வேதா நிலையத்தில் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு வசதியாக என்னென்ன ஏற்பாடுகளை செய்யலாம் என்பது குறித்து மூன்று கட்டங்களாக ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர், இது தொடர்பான பரிந்துரையை அந்தக் குழுவினர் தமிழ்நாடு அரசிற்கு அனுப்பி வைத்தனர். அந்த பரிந்துரையின்படி ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் பணியை பொதுப்பணித்துறை மேற்கொண்டது. தற்போது அந்த பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று(ஜன. 28) வேதா நினைவு இல்லம் திறக்கப்படுகிறது.

இதற்கு நிபந்தனைகளுடன் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. முக்கியமாக பொது மக்களை பார்வையிட அனுமதிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்நிலையில், இன்று(ஜன.28) காலை 10.30 மணிக்கு வேதா நினைவு இல்லம் திறக்கப்படுகிறது. துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில், எடப்பாடி பழனிசாமி வேதா இல்லத்தை திறந்து வைக்கிறார்.

வேதா நிலையம்' 10 கிரவுண்டு (24 ஆயிரம் சதுர அடி) பரப்பளவில் மூன்று மாடிகளுடன் அமைந்துள்ள வீடு ஆகும். அங்கு நகரும் வகையிலான 32 ஆயிரத்து 721 பொருள்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 8 ஆயிரத்து 376 புத்தகங்கள், 394 நினைவுப் பரிசுகள் அடங்கும்.

இங்கு 4 கிலோ 372 கிராம் எடை கொண்ட 14 வகையான தங்க நகைகளும், 601 கிலோ 424 கிராம் எடையுள்ள 867 வெள்ளிப் பொருள்களும், வெள்ளிப் பாத்திரங்களும் உள்ளன. சினிமா, அரசியல் என ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையிலான பிளாக் அன்டு ஒயிட் அரிய புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய பொருள்கள், ஜெயலலிதாவின் ஆளுமையைப் பிரதிபலிக்கும் பொருள்கள், அவர் படித்த புத்தகங்கள், நினைவுப்பொருள்கள், அவர் பயன்படுத்திய தனிப்பட்ட பொருள்களும் நினைவு இல்லத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஜெயலலிதா பயன்படுத்திய பூஜை அறையும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய திறப்பு விழாவில் தலைமைச் செயலர் க.சண்முகம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் மகேசன் காசிராஜன், பொதுப்பணித்துறை முதன்மைச்செயலர் டாக்டர் க.மணிவாசன், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்கிறார்கள்.

இதேபோல சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்துக்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா வளாகம் என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த வளாகம் மற்றும், அதன் உள்ளே அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உருவச்சிலையையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று(ஜன.28) காலை 11 மணிக்கு திறந்துவைக்கிறார்.

இதையும் படிங்க: ஜெயலலிதா நினைவிடத்தைக் காண வந்த அதிமுக தொண்டர் உயிரிழப்பு: கூட்ட நெரிசல் காரணமா?

ABOUT THE AUTHOR

...view details