தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 முதல் 5-ம் வகுப்பு வரை வரும் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே காலை உணவுத் திட்டம்!

வரும் கல்வியாண்டின் தொடக்கத்தில் இருந்தே காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் சிறப்பு அதிகாரியும், காலை உணவுத் திட்ட மாநிலக் கண்காணிப்பாளருமான இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

வரும் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே காலை உணவுத் திட்டம்!
வரும் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே காலை உணவுத் திட்டம்!

By

Published : Mar 21, 2023, 9:14 PM IST

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் சிறப்பு அதிகாரியும், காலை உணவுத் திட்ட மாநிலக் கண்காணிப்பாளருமான இளம்பகவத் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டி

சென்னை:அரசுப் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள், காலையில் உணவு அருந்தாமல் வருவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் அரசிற்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து 1 முதல் 5ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 2022 செப்டம்பர் 15ஆம் தேதி, மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளில் மதுரையில் தொடங்கி வைத்தார்.

இவ்வாறு தொடங்கப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், முதல் கட்டமாக 1,937 பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 1 லட்சத்து 48 ஆயிரத்து 315 மாணவர்கள் பயன் பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட ஆயிரத்து 543 தொடக்கப்பள்ளிகளில், ஆயிரத்து 319 பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது.

இதில் 624 பள்ளிகளில் 10 சதவீதமும், 462 பள்ளிகளில் 20 சதவீதமும் மற்றும்193 பள்ளிகளில் 30 சதவீதமும் என மாணவர் வருகை அதிகரித்துள்ளது. முக்கியமாக திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்ட அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது.

மேலும் தற்போது முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், வரும் கல்வியாண்டு (2023 - 2024) முதல் தமிழ்நாட்டில் உள்ள 30 ஆயிரத்து 122 அரசுத் தொடக்கப்பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்கள் பயன் அடையும் வகையில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் சிறப்பு அதிகாரியும், காலை உணவுத் திட்ட மாநிலக் கண்காணிப்பாளருமான இளம்பகவத் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், ''முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் கடந்த 2022 செப்டம்பர் மாதம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தினால் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

இந்தத் திட்டத்தினை சமூக நலத்துறையின் நிதி உதவி உடன், நகராட்சி நிர்வாகத் துறையும், ஊரக வளர்ச்சித் துறையின் மகளிர் மேம்பாட்டு நிறுவனமும் உணவை சமைத்து வழங்கும் பணியினை செய்கின்றனர். நகர்ப்புறங்களில் ஒருங்கிணைந்த சமையல் கூடம் அமைக்கப்பட்டு, அங்கு சமைத்து மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. கிராமப்புறங்களில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் மூலம் உணவு சமைத்து வழங்கப்படுகிறது. காலை உணவை மாணவர்கள் விரும்பி உண்ணும் வகையில் வழங்கி வருகிறோம்.

மேலும் அனைத்து மாணவர்களும் விரும்பி, காலை உணவை சாப்பிடும் வகையில் சத்தான முறையில் வழங்குவதற்கு, ஊட்டச்சத்து நிபுணர்கள் உடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டம், வரும் கல்வியாண்டின் தொடக்கத்தில் இருந்து 1 முதல் 5ஆம் வகுப்பு வரையில் மாணவர்கள் படிக்கும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும்.

இதனால் வரும் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும். இந்தத் திட்டத்தில் மாணவர்களுக்கு உணவை வழங்குவதற்கு அதிகாலையில் எழுந்து சமைக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே அரசின் வழிகாட்டுதல்படி, தொடர்ந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்துவோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:"பட்ஜெட்டில் ஏமாற்றம்; கோட்டை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவோம்" - சத்துணவு ஊழியர்கள் சங்கம்!

ABOUT THE AUTHOR

...view details