சென்னை: ரத்த தானத்தில் சேகரிக்கப்பட்ட ஒரு லட்சத்து 74 ஆயிரம் அலகுகள் ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தேசிய தன்னார்வ ரத்த தான தினம் நாளை (அக்டோபர் 1) வரவுள்ள நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையின் மூலம் வாழ்த்துச் செய்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, "விலைமதிப்பற்ற மனித உயிர்களைக் காப்பாற்றும் ரத்த தானத்தின் அவசியம் குறித்தும், ரத்த தானம் செய்வது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே எற்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் நாள் தேசிய தன்னார்வ ரத்த தான நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான தேசிய தன்னார்வ ரத்த தான நாளின் கருப்பொருள் “தன்னார்வ ரத்த தானம் செய்து, கரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு பங்களிப்போம்” என்பதாகும்.
தமிழ்நாடு அரசு, அரசு ரத்த வங்கிகளின் சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அரசு ரத்த வங்கி, தன்னார்வ ரத்த கொடையாளர்களை இணைத்திடும் வகையில் சமூக ஊடக முகநூல் உருவாக்கியது, ரத்த தான முகாம்களில் சேகரிக்கப்படும் ரத்தத்தை பாதுகாப்பாக அரசு ரத்த வங்கிகளுக்கு எடுத்துச்செல்ல 10 அதிநவீன குளிர்சாதன வசதிகளுடன் கூடிய ரத்த தான ஊர்திகள் வழங்கியது, 5 அரசு ரத்த வங்கிகளுக்கு ரத்த பரிமாற்றம் மூலம் பரவும் நோய்களை பரிசோதனை செய்திட நவீன தானியங்கி பரிசோதனை இயந்திரங்கள் வழங்கியது, அரசு ரத்த வங்கிகளுக்கு 107 ரத்த வங்கி குளிர்சாதன பெட்டிகள் வழங்கியது போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது.