தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெயலலிதா நினைவிடம்: ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆய்வு - ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழா

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தை முதலமைச்சர், துணை முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

CM
CM

By

Published : Jan 22, 2021, 5:24 PM IST

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெ. ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உடலநலக் குறைவின் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகே ஏறத்தாழ 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 50 ஆயிரத்து 400 சதுர அடி பரப்பளவில் ஃபீனிக்ஸ் பறவை அமைப்புடன் கூடிய நினைவிடம், அருங்காட்சியகம், அறிவுசார் பூங்கா, கண்காட்சி ஆகியவை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவந்தன. இந்த பணியை கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கி வைத்தனர். கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க இரவு பகலாக பணிகள் நடைபெற்றுவந்தன.

இந்நிலையில், முதல்கட்டமாக ஃபீனிக்ஸ் பறவை வடிவத்திலான நினைவிடம் ஜனவரி 27ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. இதனையடுத்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் நேரில் சென்று ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிட்டு நினைவிடம் கட்டுமான பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் தற்போது நடந்து வரும் பணிகள் குறித்தும் பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து பணிகளை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர். இந்நிகழ்வில் மூத்த அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details