தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே தபால் ஓட்டு போடலாம் - சத்யபிரதா சாகு

சென்னை: விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே தபால் ஓட்டு போடலாம். விருப்பமில்லாதவர்கள் வாக்குச்சாவடிக்கே வந்து வாக்கு செலுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

postal voting
postal voting

By

Published : Jan 22, 2021, 7:25 PM IST

இந்தாண்டு நடக்க இருக்கிற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான, இறுதி வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு ஜனவரி 20ஆம் தேதி வெளியிட்டார். இந்தத் தேர்தலில் 13 லட்சத்து 9 ஆயிரத்து 311 பேர் முதல் முறையாக தங்களின் வாக்குகளை செலுத்த உள்ளனர்.

இந்தநிலையில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தற்போது தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ”திட்டமிட்டபடி 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது. பட்டியலில் பெயர் விடுபட்டு போனவர்கள், முகவரி மாற்றம் தேவைப்படுவோர், புதிய வாக்காளர்கள் சேர்க்கைக்கு முறையாக விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் வேட்பு மனு தாக்கலுக்கு முன்பு வரை தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களுக்கு பெயர் சேர்க்க அனுமதி அளிக்கப்படும். சட்டசபை தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய யாருக்கு ஓட்டளித்தோம் என்ற ஒப்புகைச் சீட்டு கருவியுடன் கூடிய எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதுவரை 12 மாவட்டங்களில் இந்தப் பணிகள் நிறைவடைந்துவிட்டன.

எஞ்சிய மாவட்டங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களை சரிபார்க்கும் பணி பிப்ரவரி 10ஆம் தேதிக்கு முன்பாக நிறைவடையும். கடந்த தேர்தலில், தேர்தல் பணிக்கு 3.50 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டனர். இம்முறை இந்த எண்ணிக்கை 4.50 லட்சமாக இருக்கும். இதேபோல தேர்தல் பாதுகாப்பு பணியில் உள்ள காவல்துறையினரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

தமிழ்நாட்டில் இப்போது 68 ஆயிரம் வாக்கு சாவடிகள் உள்ளன. கரோனா பாதிப்பு காரணமாக ஒரு வாக்கு சாவடிக்கு ஆயிரம் வாக்காளர்கள் என்ற வகையில் வாக்கு சாவடிகளின் எண்ணிக்கையை உயர்த்த தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக வாக்கு சாவடிகளின் எண்ணிக்கை 93 ஆயிரமாக உயர்த்தப்படும். புதிய சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை அறிக்கையாக அனுப்பி வைக்க அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய தலைமை தேர்தல் கமிஷனர், தமிழ்நாட்டிற்கு வருகை குறித்து இப்போதைக்கு எந்த தகவலும் இல்லை. இருப்பினும் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் தமிழ்நாட்டிற்கு வருவார். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகளை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே தபால் ஓட்டு போடலாம். விருப்பமில்லாதவர்கள் ஓட்டு சாவடிக்கே வந்து ஓட்டு போடவும் அனுமதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details