தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நபர்களை கைது செய்ய டிஜிபிக்கு அரசு வழக்கறிஞர் வலியுறுத்தல் - அசன் முகமது ஜின்னா

தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களால் வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபிக்கு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா வலியுறுத்தியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 25, 2023, 8:44 PM IST

தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகள் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரை ஆஜர்படுத்துவதற்கான செயல்முறையைத் தவிர வேறில்லை.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 7 உட்பிரிவு 2 ன் கீழ், ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட்டை பிறப்பித்த நீதிமன்றங்களின் மாஜிஸ்திரேட்டால் உத்தரவு செயல்படுத்தப்படும் வரை அல்லது அதை ரத்து செய்யும் வரை நடைமுறையில் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும்போது, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை, மாநிலத்தில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ள ஏராளமான ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டுகள் குறித்து தங்கள் ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன், நிலுவையில் உள்ள ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டுகளை முறையாக நிறைவேற்றுவதில் காவல்துறையின் முறையாக செயல்படவில்லை என்றும், மெத்தனப் போக்காக உள்ளதாக வேதனை வெளிப்படுத்தியுள்ளதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகள் எத்தனை நிலுவையில் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றப் பதிவுத்துறைக்கு நீதிபதி பி.வேல்முருகன் உத்தரவிட்டுள்ளதோடு, அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகள் மற்றும் கூடுதல் செஷன்ஸ் நீதிபதிகள், உதவி அமர்வு நீதிபதிகள், சிறப்பு அமர்வு நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் என அந்தந்த மாவட்டங்களில் நிலுவையில் உள்ள ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே, இது தொடர்பாக, கடந்த ஜனவரி 2023 தேதியிட்ட உத்தரவின்படி, மேற்கு மண்டலம் ஐஜி , சம்பந்தப்பட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களிடமிருந்து அனைத்து விவரங்களையும் பெற்று, சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் ஒப்பிட்டு பார்த்து விரிவான அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா தெரிவித்துள்ளார்.

இதேபோல்,அனைத்து மாவட்டங்களிலும் குற்றவியல் வழக்குகள் மட்டுமல்லாமல், மற்ற எல்லா வழக்குகளிலும்
கீழ் நீதிமன்றங்கள், மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் உட்பட அனைத்து நீதிமன்றங்கள்களில் நிலுவையில் உள்ள வாரண்டுகள், ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகள் குறித்த விரிவான அறிக்கை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், அனைத்து காவல்துறை ஆணையர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து உடனடியாக நிலுவையிலுள்ள அனைத்து வாரண்ட்டுகளை நிறைவேற்ற அறிவுறுத்த வேண்டும் என தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபுவுக்கு அசன் முகமது ஜின்னா எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: நர பலியில் இருந்து தப்பியது எப்படி? - விவரிக்கிறார் தமிழகத்தில் தஞ்சம் அடைந்த போபால் பெண்

ABOUT THE AUTHOR

...view details