சென்னை சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், ''ஜார்கண்ட் மாநில மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு அளித்துள்ள வெற்றிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். காங்கிரஸ் கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை ஜார்கண்ட் மாநில மக்கள் அளித்துள்ளனர்.
இன்று திமுக பேரணிக்கு ஆதரவளித்த அனைத்துக் கட்சிகள், அமைப்புகளுக்கு நன்றிகள். பாஜக தேர்தல் அறிக்கையில் தேசியக் குடியுரிமையை அமல்படுத்துவோம் என்று கூறியதை யாரும் மறுக்கவில்லை. பாஜக அமைச்சர்கள் பலர் தேசியக் குடிமக்கள் பதிவேட்டை அனைத்து மாநிலத்திலும் அமல்படுத்தப்படும் என்று பேசியுள்ளனர். ஆனால் இதை ஏதும் பிரதமர் மோடி நாங்கள் பேசவே இல்லை என்று கூறுவது வருத்தமாகவும், வேடிக்கையாகவும் உள்ளது.
குடியுரிமைச் சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இலங்கை, பர்மா போன்ற அண்டை நாடுகளை ஏன் சேர்க்கவில்லை. இஸ்லாமிய மதத்தை விட்டு ஆறு மதத்தை மட்டும் ஏன் சேர்த்துள்ளனர். இலங்கை ஹிந்துக்களும்கூட சேர்க்கப்படவில்லை. இந்த சட்டம் சம உரிமையை நிலைநாட்டவில்லை.
உலகில் மிகவும் நசுக்கப்படும் சிறுபான்மையான இலங்கை தமிழர்கள், பாகிஸ்தான் அகமதியா, வங்கதேசம் ரோஹிங்கிய முஸ்லீம் போன்றவர்கள் இணைக்கப்படவில்லை.