தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 31, 2022, 7:10 AM IST

ETV Bharat / state

களையிழந்த சேத்துப்பட்டு பசுமை பூங்கா..என்ன காரணம்?

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் திறந்துவைக்கப்பட்ட சேத்துப்பட்டு பசுமை பூங்கா தற்போது சுற்றுலா பயணிகள் வருகை இன்றியும், பூங்காவை மேம்படுத்த போதுமான நிதி ஒதுக்கப்படாததாலும் அதன் பொலிவை இழந்து வருகிறது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை காணலாம்.

சேத்துப்பட்டு பசுமை பூங்கா
சேத்துப்பட்டு பசுமை பூங்கா

சென்னை:சென்னை மாவட்டம் சேத்துப்பட்டு பசுமை பூங்கா ரூ. 48 கோடி செலவில் அதிமுக அரசால் கட்டப்பட்டது. அதனை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திறந்து வைத்தார். இந்த சுற்றுச்சூழல் பூங்கா நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால், உள்ளூர்வாசிகள் முதல் சுற்றுலா பயணிகள் வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

குறிப்பாக மாலை நேரத்தில் குழந்தைகளுக்கான சிறந்த பொழுதுபோக்கு இடமாக இருந்து வந்தது. இந்த பூங்கா தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் கண்காணிக்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும் வந்தது. பூங்கா வளாகத்தில் இருக்கும் ஏரியில் படகு சவாரி மேற்கொள்ளும் வசதி சுற்றுலா பயணிகளால் அதிகம் ஈர்க்கப்பட்டது.

மாலை நேரங்களில் பூங்கா, ஏரியை குருசாமி பாலத்தில் இருந்து வாகன ஓட்டிகள் பார்த்துச் செல்வர். உணவு அரங்கம், 1.5 கிமீ அளவிற்கு நடைபாதை, மீன்பிடித்தல் மற்றும் பல வசதிகள் பூங்காவில் உள்ளன. தாவரங்கள் நிறைந்த அழகிய நீர்த்தேக்கமாகவும் இருந்து வந்தது.

வெறிச்சோடிய பூங்கா : 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ‘வர்தா’ புயல் பூங்காவின் வளாகத்தில் உள்ள மரங்களையும் விளக்குகளையும் தரைமட்டமாக்கியது. பின்னர் பூங்காவை தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டுக் கழகம் பூங்காவை சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. பிறகு ஏராளமான சுற்றுலாப் பயணிகளுடன் படகு சவாரி மீண்டும் தொடங்கியது.

சேத்துப்பட்டு பசுமை பூங்கா

சேத்துப்பட்டு பசுமை பூங்கா ஆரம்பத்தில் அதிகமான சுற்றுலா பயணிகளை ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது. எனினும் படிப்படியாக இந்த பூங்கா அதன் களையை இழந்து தற்போது வெறிச்சோடிய இடமாக மாறியுள்ளது.

இது குறித்து பூங்கா ஊழியர்கள் கூறுகையில், "கரோனா பெருந்தொற்றின் முதல் அலை மார்ச் மாதம் 2020இல் தொடங்கியவுடன் பூங்கா மூடப்பட்டது. முதல் அலைக்கு பிறகு பூங்கா திறக்கப்பட்ட போதும், சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்தது. இரண்டாவது அலைக்கு பின்னர் பொதுமக்கள் வருகை முற்றிலுமாக குறைந்து பாலைவனமாக மாறியது என்றே சொல்லலாம்.

படகு சவாரிகளும் இல்லாமல் வெறிச்சோடியது. நிதி பற்றாக்குறையால் பூங்காவை மேம்படுத்த முடியவில்லை" என்றனர்.

ரூ.1000 வருவாய் பெறுவதே கடினம் : பூங்கா அலுவலர் ஒருவர் கூறுகையில், "சுற்றுச்சூழல் பூங்கா தற்போது வெறிச்சோடிய இடமாக உள்ளது. பார்வையாளர்கள் படகு சவாரியை பயன்படுத்தாததால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. முன்னதாக, பூங்கா ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டி வந்தது. தற்போது 1,000 ரூபாய் வருவாயை பெறுவதே கடினமாக உள்ளது" என்றார்.

பூங்கா தொடங்கப்பட்ட போது, ஒரு நாளைக்கு 600 முதல் 1000 பார்வையாளர்கள் வருகை தந்தனர். வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை 2,000 ஆக இருந்தது. தற்போது நடை பயிற்சிக்கு மட்டும் பூங்காவை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளிலிருந்து குறிப்பிட்ட நபர்கள் மட்டும் வருகின்றனர். மேலும், படகு சவாரி இல்லாததால் 15 படகுகளும் ஏரியின் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றார் மற்றொரு அலுவலர்.

சேத்துப்பட்டு பசுமை பூங்கா

பாலைவனம் போல் ... :"கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேத்துப்பட்டு பசுமை பூங்கா சென்னைவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் நல்ல பொழுதுபோக்கு இடமாகவும், மன அழுத்தத்தை குறைக்க இனிமையான இடமாகவும் இருந்தது. ஆனால் தற்போது பூங்கா பராமரிப்பின்றி உள்ளது. போதுமான நிதியும்

பூங்காவை சீரமைக்க நிதி ஒதுக்கவில்லை. இதனால் பூங்கா பாலைவனம் போல் காட்சியளிக்கிறது" என கீழ்ப்பாக்கம் குடியிருப்பாளர்கள் சங்கம் முன்னாள் தலைவர் பிரகாஷ் ஹெச் லுல்லா, தெரிவித்தார். இது குறித்து மீன்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டி.எஸ்.ஜவஹர் கூறுகையில், "சேத்துப்பட்டு பசுமை பூங்காவை மேம்படுத்த மீன்வள மேம்பாட்டுக் கழகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது" என்று கூறினார்.

இதையும் படிங்க: 'இப்படிப்பேசினால் தான் மோடிக்குப் புரியும்' - ஹிந்தியில் முழங்கிய விஜயகாந்த் மகன்!

ABOUT THE AUTHOR

...view details