சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் மாமல்லபுரம், பூஞ்சேரி கிராமத்தில், போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்துவது தொடர்பான சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் அமைச்சர்கள், அரசுத்துறை செயலாளர்கள், உயர் அலுவலர்கள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் அடங்கிய பணிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெற்ற சிறப்பு ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர்களுடன் ஒருங்கிணைந்து, மாவட்டங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைத்து விளையாட்டு வீரர்களுக்கும், அமைப்பாளர்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் துரிதமாக வழங்கிட வேண்டும் என்றும், இச்சதுரங்க விளையாட்டு போட்டிகளை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் போட்டி நடைபெறும் அரங்குகளில் டிஜிட்டல் போர்டுகளை வைத்திட வேண்டும் என்றும், விளையாட்டு போட்டி நடைபெறவுள்ள அரங்குகளின் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும் பூஞ்சேரி கிராமத்தில், போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில், 52,000 சதுர அடியில் சதுரங்க விளையாட்டு வீரர்கள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டு வருகின்ற நவீன உள் விளையாட்டரங்கம், ஏற்கனவே அப்பகுதியில் உள்ள 22,000 சதுர அடியிலான அரங்கத்தினை விளையாட்டரங்கமாக மேம்படுத்தும் பணி, வாகனங்கள் நிறுத்துமிடம், சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புப் பணிகள் நடைபெற்று வருவது குறித்தும், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விளையாட்டு வீரர்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.