மனிதர்களை வேறு கிரகங்களுக்கு கொண்டு செல்லும் ராக்கெட் டிசைன் தயார் சென்னை:சென்னை பாடியில் உள்ள செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் வீட்டிற்கு நேரில் சென்று அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் அவருக்கு சதுரங்க வடிவிலான நினைவு பரிசு ஒன்றையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து பிரக்ஞானந்தாவின் வீட்டில் சோம்நாத் இட்லி சாப்பிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், "செஸ் மிகவும் பழமையான விளையாட்டு. அது இந்தியாவில் சதுரங்கம் என்கிற பெயரில் தோன்றியிருக்கிறது. தற்போது நிலவில் பிரக்யான் ரோவர் உள்ளது, தரையில் பிரக்ஞானந்தா உள்ளார். பிரக்யான் ரோவர் எங்களுக்கு குழந்தை போன்றது, அதேபோல இங்கு பிரக்ஞானந்தா உள்ளார்.
நாங்கள் நிலவில் சாதித்ததை இவர் பூமியில் சாதித்து உள்ளது பெருமையாக உள்ளது. மேலும் பிரக்ஞானந்தா எங்களுடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இருப்பதில் நாங்கள் மேலும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். தற்போது இருக்கும் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் நான்கு டன் எடையை விண்வெளிக்கு எடுத்துச் செல்ல கூடியதாக உள்ளது.
இதையும் படிங்க: வாக்காளர்களை கவரும் தேர்தல் வாக்குறுதிகள்.. காங்கிரஸின் கர்நாடகா பார்முலா.. கேசிஆரின் புதிய யுத்தி.. தெலங்கானாவில் சூடுபிடிக்கும் அரசியல் களம்!
அதை 10 முதல் 12 டன் எடையை எடுத்துச் செல்ல கூடியதாக மாற்ற வேண்டும் என்பதே நமது லட்சியமாக உள்ளது. அதற்காக ஒரு டிசைனையும் நாங்கள் செய்துள்ளோம். மத்திய அரசின் அனுமதி இரண்டு மூன்று ஆண்டுகளில் கிடைத்துவிட்டால் நாங்கள் அதை செய்து முடிப்போம்.அதன்படி வேற்று கிரகங்களுக்கு மனிதர்களைக் கொண்டு செல்லும் பெரிய வகை ராக்கெட்களுக்கு என்ஜிஎல்வி ராக்கெட் என பெயர் வைத்துள்ளோம். முன்னரே சொன்னது போல அதன் டிசைன் தயாராக உள்ளது மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்" என தெரிவித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரக்ஞானந்தா, "சந்திரன் நிலவில் தரையிறங்கும் போது நான் ஹங்கேரி நாட்டிலிருந்து அதனை நேரில் பார்த்துக் கொண்டிருந்தேன். அது எனக்கு மிகவும் பெருமையான ஒரு தருணமாக இருந்தது. இந்த தருணத்தில் நான் இஸ்ரோவில் இருக்கும் அனைத்து விஞ்ஞானிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று சோம்நாத் அவர்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்கினாரா மஹுவா மொய்த்ரா? பாஜக எம்.பி. மக்களவை சபாநாயகருக்கு கடிதம்!