சென்னை : திருவல்லிக்கேணி ராஜாஜி நகர் கஜபதி தெருவைச் சேர்ந்தவர் விக்கி என்ற விக்ரம் (23). கடந்த 14ஆம் தேதி இரவு கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டின் உள்ளே வைத்து ஒரு கும்பல் விக்ரமை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து, தகவலறிந்து விரைந்து வந்த ஐஸ் ஹவுஸ் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு போராடிய விக்ரமை சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஐந்து பேர் கைது
இந்தச் சம்பவம் தொடர்பாக ஐஸ் ஹவுஸ் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ரவுடி சரத்குமார், விஸ்வநாதன், விக்னேஷ், மொட்டை விஜய், அம்பத்தூரைச் சேர்ந்த சரத் ஆகியோர் சேர்ந்து கத்தியால் வெட்டியது தெரியவந்தது.
இதையடுத்து, ஐந்து பேரையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விக்ரம் இன்று(ஆக.20) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை உடற்கூராய்வு செய்வதற்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
பின்னர்,ஐஸ் ஹவுஸ் காவல் துறையினர் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐந்து பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: பெண் காவலரிடம் 9 சவரன் தங்க செயின் பறிப்பு!