சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த 20 வயது நிரம்பிய வாலிபர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தன்பாலின ஈர்ப்பாளர் டேட்டிங் செய்யும் Grindr-Gay என்ற செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். அந்த செயலியில் அறிமுகமான நபர் ஒருவர் கல்லூரி மாணவனிடம் நெருக்கமாகவும், ஆபாசமாகவும் பேசி வந்துள்ளார். பின்னர் இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், ரகசிய இடத்தில் சந்திக்கலாம் என அந்த நபர் வாலிபரை அழைத்துள்ளார்.
இதனை நம்பிய கல்லூரி மாணவர் நேற்று இரவு (ஆகஸ்ட் 01) அந்த நபர் அழைத்த சென்னை சூளைமேடு லோகநாதன் தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கல்லூரி மாணவர் அறைக்குள் சென்றதும் அங்கு மறைத்திருந்த 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று கத்தியை காட்டி கல்லூரி மாணவரை மிரட்டி உள்ளனர்.
தொடர்ந்து கல்லூரி மாணவரை நிர்வாணப்படுத்தி அதை வீடியோவாக போனில் எடுத்து பணம் மற்றும் நகையை கேட்டு அந்த கும்பல் மிரட்டி உள்ளனர். மேலும், இதனால் பயந்துப்போன கல்லூரி மாணவரிடம் இருந்து 13 ஆயிரம் பணம் மற்றும் ஒரு செல்போனை பறித்துவிட்டு, காவல் நிலையத்தில் புகார் அளித்தால் நிர்வாண வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டி அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சூளைமேடு போலீசார் கல்லூரி மாணவனிடம் பேசிய செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தி இருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்திய விசாரணையில், தேனி மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார்(20) மற்றும் மதுரையை சேர்ந்த தேவேந்திரன் என்பதும் தெரியவந்தது. வேறு மாவட்டத்தை சேர்ந்த 4 நபர்கள் வீடு எடுத்து தங்கி வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக இவர்கள் Grindr-Gay என்ற செயலியில் போலியான பெயரில் ஐடி உருவாக்கி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வயதான நபர்களிடம் ஆபாசமாகவும், நெருக்கமாகவும் பேசுவதை வாடிக்கையாக வைத்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பின்னர் நெருக்கமாக இருக்க ரகசிய இடத்தில் சந்திக்கலாம் என அவர்களை வரவழைத்து கத்தியை காட்டி மிரட்டி நிர்வாணப்படுத்தி பணம், நகை, செல்போன்கள் பறிப்பதை வாடிக்கையாக வைத்திருப்பதும், கொள்ளையடிக்கும் பணத்தில் நான்கு நபர்களும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதே போல Grindr-Gay சாட் ஆப் மூலமாக ஆபாசமாக பேசி நேரில் அழைத்து பணப்பறித்த சம்பவங்கள் பாண்டிச்சேரி, திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நடைபெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் இந்த கும்பலுக்கும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள கும்பலுக்கும் தொடர்புள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சமூக வலைதளத்தில் தெரியாத நபர்களிடம் பேசுவதை தவிர்க்குமாறும், புகைப்படங்களை ஷேர் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:சென்னையில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை.. தனியார் நிறுவன உரிமையாளர் கைது!