சென்னைமாநகரத்தில் கனமழை பெய்தாலும் நகரத்தில் நிலத்தடி நீர் மட்டம் கடந்த சில மாதங்களாக குறைந்து கொண்டே வருவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. ஒரு சில இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் திருப்திகரமாக இருந்தாலும், சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது என சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் வாரிய தரவுகள் தெரிவிக்கின்றன.
இது நீரியல் நிபுணர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், 'மழை நீர் சேகரிப்பு' திட்டத்தை அரசு கட்டாயமாக செயல்படுத்த வேண்டும் எனவும் இல்லையெனில் வரும் காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம் என எச்சரித்துள்ளனர். மேலும் ஒரு சில மண்டலங்களில் சிறிதளவே நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. உதாரணமாக திரு.வி.க மண்டலத்தில் கடந்த ஆண்டு (ஜூன் 19, 2022) -2.66 மீட்டராக இருந்த நிலத்தடி நீர் தற்போது (ஜூன் 19, 2023) -1.931 மீட்டர் ஆக உயர்ந்துள்ளது.
அடுத்ததாக சோளிங்கநல்லூர் பகுதியில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் சிறிய அளவே அதிகரித்துள்ளது. வளசரவாக்கம், அண்ணா நகர், பெருங்குடி மண்டலங்களில் நிலத்தடி நீர் குறிப்பிட்டளவு உயர்ந்துள்ளது என தரவுகள் கூறுகின்றன. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 10 மண்டலங்களில் நிலத்தடி நீர் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பெரும்பான்மையான மண்டலங்களில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
இது குறித்து முன்னாள் மெட்ரோ வாரியத்தின் நீரியல் நிபுணர் ஜெ. சரவணன் கூறுகையில், "சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையினால் நமக்கு 10 செ.மீ மழை கிடைத்துள்ளது. மேலும் இந்த மழைநீரை நாம் சேமித்து வைத்திருக்க வேண்டும்" என தெரிவித்த அவர் மழை நீர் சேமிப்பு என்ற திட்டத்தையே சென்னைவாசிகள் மறந்து விட்டனர்.
நிலத்தடி நீரை பொறுத்தவரை பொதுவாக ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் குறையும். மேலும் வெயிலின் தாக்கம் கடந்த இரண்டு மாதம் அதிகமாகவே இருந்தது. வெயிலின் தாக்கம் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் குறைய வாய்ப்பு உள்ளது. பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்கினால் மழை பெய்து நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது" என கூறினார்.