சென்னை:தமிழக மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தற்போது அண்மைக் காலமாக காலை நேரத்தில் வெயிலும் மாலை நேரத்தில் மழையும் மாறி மாறி பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்து இரண்டு நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது. இதன் படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதலே ஒரு சில இடங்களில் கனமழையும் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது.
சென்னை நகரம் அதன் புறநகரிலும் மழையானது விட்டு விட்டு பெய்து வருகிறது. மேலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதேபோல் சென்னையில் புறநகர் பகுதிகளான மதுரவாயல், திருவேற்காடு, பாடி, அம்பத்தூர், ஆவடி ஆகிய இடங்களில் காலை 6 மணி முதல் தொடர் சாரல் மழை பெய்தது.
அதேபோல் அண்ணா நகர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், முடிச்சூர், வண்டலூர் ஆகிய பகுதிகளில் கனமழையானது பெய்தது. சில நேரம் பெய்த கனமழை காரணமாக சென்னையின் தாழ்வான பகுதியில் மழை நீரானது தேங்கியது. அதேபோல் புறநகர் பகுதிகளில் சாலையில் வெள்ளம் போல் மழை நீரானது ஓடியது.
போக்குவரத்து நெரிசல்: காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தாம்பரம் ஆகிய பகுதிகளில் நள்ளிரவில் இருந்து மழை பெய்து வருகிறது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் இருந்து தொடர் மழை பெய்ததால் ஜிஎஸ்டி சாலை உள் வட்டசாலை, 100 அடி சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை, ஓஎம்ஆர், ஈசிஆர், நெல்சன் மாணிக்கம் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அம்பத்தூர் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் காலை நேரத்தில் பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்பவர்கள் ஆகியோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதையும் படிங்க: அரசு பள்ளியில் அவலம்... சத்துணவு கூடத்தின் மேற்கூரை இடிந்து விபத்து...! நூலிழையில் உயிர் தப்பிய சமையலர்!