தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘தானியங்கி மதுபானம் விற்பனையை கைவிடுக’ - அரசுக்கு ஈபிஎஸ் வலியுறுத்தல்!

இயந்திரம் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 29, 2023, 6:09 PM IST

சென்னையில் தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை டாஸ்மாக் நிறுவனம் தொடங்கி உள்ளது. இதில், 21 வயது நிரம்பியவர்களை மட்டுமே இயந்திரத்தில் இருந்து மதுபானம் பெற அனுமதிக்கப்படும் என டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சி, மக்கள் நலனுக்காக செயல்படுவதற்கு பதிலாக, தமிழ்நாடு மக்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது.

இந்த ஆட்சியில், தமிழ் நாட்டை போதைப் பொருட்களின் கேந்திரமாக மாற்றிவிட்டார்கள். இதனால் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை பெருகி உள்ளதை பலமுறை நான் சட்டப்பேரவையில், ஊடகத்தின் வாயிலாகவும் சுட்டிக் காட்டியுள்ளேன். திருமண மண்டபத்திலும், விளையாட்டுத் திடல்களிலும் மதுபானம் அருந்தலாம் என்று அரசாணை வெளியிட்டதைத் தொடர்ந்து, சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் டாஸ்மாக் கடைக்கு தானியங்கி மது விற்பனை மையம், அதாவது இயந்திரம் மூலம் மது வகைகளை விற்பனை செய்வதற்கான தானியங்கி இயந்திரம் அறிமுகப்படுத்தி உள்ளது.

மேலும், தமிழ்நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் இதுபோன்ற இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளதாகவும் வந்துள்ள செய்திகள், பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், குறிப்பாக இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமியர்கள் என எல்லோரும் வந்து செல்லும் மால்களில், டாஸ்மாக் தானியங்கி இயந்திரம் மக்களுக்கு என்ன மாதிரியான எண்ணத்தை விதைக்கும் என்ற அடிப்படை யோசனைகூட இந்த அரசுக்கு இல்லையா ? ஏற்கெனவே பள்ளி மாணவ, மாணவியர் சீருடை அணிந்தே மதுபானங்கள் அருந்துவது ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

சாதாரண குளிர்பானங்களை அருந்துவதே உடல் நலத்திற்குக் கேடு என்று உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவுறுத்தி வரும் நிலையில், மதுபானங்களை தாராளமாக பயன்படுத்த இளைஞர்களைத் தூண்டுகிறது இந்த திமுக அரசு. மக்கள் நலனையோ, இளைஞர்களின் எதிர்காலத்தையோ, தமிழ் நாட்டின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டையோ கருத்தில் கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக இந்த திமுக அரசின் பொம்மை முதலமைச்சர் மக்களைப் பற்றி கொஞ்சம்கூட அக்கறை கொள்ளாமல் வருவாயை மட்டுமே கருத்தில்கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பது வெட்கக்கேடானது.

நவீனமயமாகி வரும் கல்வித் துறை, சுகாதாரத் துறைகளில் கூட இதுவரை எந்த ஒரு நவீன திட்டத்தையும் இந்த அரசு கொண்டு வந்ததாகத் தெரியவில்லை. கொலைக் களமாக மாறிவரும் தமிழகத்தில், மதுவால் ஏற்படும் மரணங்களைப் பெருக்கி, தன் அரசின் மற்றும் தனிப்பட்ட கஜானாவை நிரப்ப, மக்களைக் குறிவைத்து திட்டம் தீட்டி செயல்படும் இந்த அடாவடி அரசை, அதிமுக வன்மையாகக் கண்டிக்கிறது. இயந்திரம் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டத்தை இந்த விடியா அரசு உடனயாகக் கைவிட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:எங்கே செல்லும் இந்த பாதை.. சென்னையில் தானியங்கி மது விற்பனை இயந்திரம்!

ABOUT THE AUTHOR

...view details