சென்னை லயோலா கல்லூரி, மாற்று ஊடக மையம் இணைந்து நடத்தும் 7ஆம் ஆண்டு "வீதி விருது விழா" நிகழ்ச்சி கல்லூரியின் வளாகத்தில் தொடங்கி உள்ளது. நிகழ்ச்சியில் முதலாவதாக, நிகழ்வுக்கு வரும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு ’ஊர் அழைப்பு’ வழங்கப்பட்டது. கொல்லங்குடி கருப்பாயியின் அசத்தலான கிராமியப் பாடலும், ராமசாமி குழுவினரின் நாதஸ்வர இசையும் இசைக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்துள்ள புகழ்பெற்ற நாட்டுப்புறக் இசைக்கலைஞர்கள், இசைகளை முழங்க கல்லூரியின் வாயிலில் இருந்து அனைத்து விருந்தினர்களையும் ’ஊர் அழைப்பு’ என்கிற கலாசார நிகழ்வின் மூலம் வரவேற்றனர். தமிழர்களின் கலாசாரப்படி விருந்தினர்கள் அழைப்பு என்பதை இதன்மூலம் இவ்விழாவிற்கு வந்தவர்கள் அறிந்துகொள்ள முடிந்தது. இதைத்தொடர்ந்து தமிழர்களின் பழமையான கலைநிகழ்ச்சிகள் அரங்கேறின.