சென்னை: போக்குவரத்து காவல்துறை போக்குவரத்து விதிமீறல்களைக் குறைக்கவும், சாலை விபத்து மரணங்களைக் குறைக்கவும் பல்வேறு புதிய தொழில் நுட்பங்களையும், புதிய திட்டங்களையும் அமல்படுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் தானியங்கி முறையில் அபராதம் விதிக்கும் ANPR கேமராக்கள் போடப்பட்டது. மேலும் அபராதம் வசூலிக்கும் முறையிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு நவீன காலத்திற்கு ஏற்ப அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த அபராதங்களை வசூல் செய்வதற்காக 12 கால் சென்டர்கள் உருவாக்கப்பட்டு நிலுவையில் உள்ள அபராதம் தொகை சுமார் 29 கோடி ரூபாய் வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூல் செய்யப்பட்டது.
அதிகரிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையினால் சென்னை மாநகரம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரமாக மாறி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையிலும், சீர்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளைப் போக்குவரத்து போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். 186 இடங்களில் ரிமோட் சிக்னல்கள் அமைக்கப்பட்டும், 104 சந்திப்புகளில் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஒலிப்பெருக்கிகள் மற்றும் பாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும் போக்குவரத்து காவலர்கள் சீரிய முறையில் பணியாற்றுவதைக் கண்காணிக்க E beat செயலிகள் கொண்டுவரப்பட்டன. பொதுமக்கள் சமூக வலைதளங்கள் மூலம் அளிக்கப்படும் புகார்கள், அறிவுறுத்தல்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல்கள் ஆகியவைகளை உடனுக்குடன் ஆய்வு செய்து தீர்வு காணும் வகையில் சென்னை போக்குவரத்து காவல்துறையின் சமூக வலைதள பக்கம் தீவிரமாகச் செயல்படுகிறது.
போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமில்லாமல், விதிமுறைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைப் போக்குவரத்து போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். மெட்ரோ பணிகள் மற்றும் மாநகராட்சி பணிகள் காரணமாக பல்வேறு இடங்களில் திறம்பட போக்குவரத்து மாற்றங்கள் செய்து முன்னோட்டம் பார்க்கப்பட்டது. இந்த போக்குவரத்து மாற்றத்தின் மூலம் போக்குவரத்து நெரிசல்கள் குறைக்கப்பட்டது.
அதிகரிக்கும் சில குறிப்பிட்ட போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்த சிறப்பு தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அறிவுரைகளும், அபராதங்களும் விதிக்கப்பட்டன. உதாரணமாக சீட் பெல்ட் அணிவது, ஹெல்மெட் அணிவது, ஒரு வழிப்பாதை, ஹாங்கிங், ஸ்டாப் லைன் உள்ளிட்ட விதிமீறல்களைக் கட்டுப்படுத்த சென்னை முழுவதும் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் பல மடங்கு உயர்த்தப்பட்ட புதிய அபராத தொகை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தாலும், எந்தவித பிரச்சனையும் ஏற்படாமல் அமல்படுத்தியதில் சென்னை காவல்துறை சிறப்பாகப் பங்காற்றியுள்ளது.