சென்னை:போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தவும், விபத்துகளை தடுக்கவும் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் படி அறிவுறுத்தப்பட்ட நம்பர் பிளேட்டுகளை வாகனங்களில் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என சென்னை போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக சென்னையில் முக்கிய சாலைகள் மற்றும் பார்க்கிங் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்படக்கூடிய வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் விதிமீறல்கள் குறித்து போக்குவரத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியபடி குறிப்பிட்ட அளவுகள் மற்றும் எண்களின் வடிவம் ஆகியவற்றை சரியான முறையில் நம்பர் பிளேட்டுகளில் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் உடனடியாக அந்த இருசக்கர வாகனங்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு அபராதம் விதித்தற்கான நோட்டீஸும் இரு சக்கர வாகனங்களிலேயே ஒட்டப்படுகிறது.
இது மட்டுமல்லாமல் நம்பர் பிளேட்டுகளில் போட்டோக்கள் ஓட்டுவது, பிற வாசகங்கள் எழுதுவது, நம்பர் பிளேட் இல்லாமல் இருப்பது ஆகிய வாகனங்களுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. முதல்முறை 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட வாகனம், நம்பர் பிளேட்டை சரி செய்யாமல், மறுபடியும் போலீசாரிடம் பிடிபட்டால் அதற்கு மூன்று மடங்கு 1500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.