சென்னை: பொதுமக்கள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் போது அவர்களுக்கு எந்த மாதிரியான அபராதங்கள் விதிக்கப்படுகிறது என்பது தொடர்பாக வேப்பேரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டிவேல், பொம்மைகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.இது தொடர்பாக காவல் ஆய்வாளர் பாண்டி வேல் கூறியதாவது, “போக்குவரத்து சிக்னலில் ஸ்டாப் லைன் என்கிற கோட்டிற்கு முன்னதாக வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும். ஆனால் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஸ்டாப் லைன் தாண்டி நிற்பது மட்டுமில்லாமல் சிவப்பு சிக்னல் போட்ட பிறகும் வாகனத்தை எடுத்துச் செல்கின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் விபத்துகள் அதிகமாக ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இதனைப் போக்குவரத்து காவல்துறையினர் அவர்களுடைய செல்போன் மூலமாகப் புகைப்படம் எடுத்து அபராத தொகையினை விதித்து வருகின்றனர். இருப்பினும் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் ஸ்டாப் லைன் தாண்டி நிற்கும் வாகனங்கள், அதேபோன்று போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களைத் தானாகப் புகைப்படம் எடுத்து அபராத தொகையினை அந்த வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்குக் குறுஞ்செய்தி மூலமாக அனுப்பி விடுகிறது.
இதற்கு அடுத்தபடியாக அந்த பகுதியில் இருக்கக்கூடிய காவல் ஆய்வாளர்களிடம் 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வந்துவிட்டது என பொதுமக்கள் புகார்களாகக் கொடுக்கின்றனர். தானியங்கி கேமராக்கள் பொருத்தவரை போக்குவரத்து சிக்னலில் தாண்டி நின்றாலோ அல்லது சிக்னல் போட்ட பிறகும் வாகனங்களை இயக்கி சென்றாலும் உடனடியாக புகைப்படம் எடுத்து அபராத தொகையையும் அனுப்பி வைக்கப்படுகிறது.