சென்னை: பெருநகர போக்குவரத்து காவல் துறை பல்வேறு வாகனங்களுக்கான வேக வரம்புகள் நிர்ணயித்துள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை செய்திகுறிப்பு ஒன்றும் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, "சென்னையில் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு வாகன ஓட்டிகள் வேக வரம்பை கடைபிடிப்பது முக்கியமான ஒன்று. தற்போது சென்னையில் மட்டும் 62.5 லட்சம் வாகனங்கள் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில் சாலைப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சாலையைப் பயன்படுத்துபவர்கள் போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகளை கடுமையாகப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக விதிமீறலில் ஈடுபடுபவர்களால் மற்ற சாலைப் பயணிகளையும் பாதிப்படைய செய்யும் என்பதால், வேக வரம்பு விதிமுறைகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியமான ஒன்று" என போக்குவரத்து காவல்துறையினர் தெறிவித்துள்ளனர்.
மேலும், "முன்னதாக 2003 ஆம் ஆண்டில் பல்வேறு வாகனங்களுக்கான வேக வரம்புகளை, சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையால் நிர்ணயிக்கப்பட்டது, அதில் காலை 7மணி முதல் 10 மணி வரை ஆட்டோ 25 கி.மீ, கனரக வாகனங்கள் 35 கி.மீ,
இலகு ரக வாகனங்கள் மற்றும் இருசக்கர 40 கி.மீ எனவும், கனரக வாகனங்கள் 40 கிமீ, இலகுரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் 50 கி.மீ என வேக கட்டுபாடு நிர்ணயிக்கப்பட்டது.
தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் சாலை கட்டமைப்புகளில் நவீன முன்னேற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பதால், சென்னை மாநகரில் பல்வேறு வகை வாகனங்களுக்கு வேக வரம்பை மறுமதிப்பீடு செய்து, வேக வரம்பினை மாற்றியமைக்க வேண்டும் என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை கூடுதல் காவல் ஆணையாளர் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினை சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அமைத்து இருந்தனர்.