சென்னை:சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மும்பை லோகமான்ய திலக் ரயில் நிலையம் வரை செல்லும் லோகமான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயில் (MAS LTT EXPRESS) வண்டி எண் - 12163 பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே சென்ற போது இன்ஜின் பகுதியில் தீப்பற்றி எரிந்து கரும்புகை வெளிவந்துள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மும்பைக்கு இன்று (ஜூன் 22) மாலை சரியாக 6:20 மணி அளவில் லோக்மான்ய திலக் அதிவிரைவு ரயில் புறப்பட்டது. இந்த நிலையில், புறப்பட்டு 20 நிமிடங்களுக்குள் பேஸின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தைக் கடந்த நிலையில், இந்த லோக்மான்ய திலக் அதிவிரைவு ரயில் வியாசர்பாடி ராமலிங்கம் கோயில் அருகே வந்தபோது திடீரென இன்ஜின் பகுதியில் கரும்புகை வெளிவந்தது.
ரயில் இன்ஜின் மற்றும் இணைக்கப்பட்ட முதல் பெட்டிக்கு இடையே திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைக் கண்ட ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். ரயில் இன்ஜின் மற்றும் அதற்கு பின்னர் உள்ள பெட்டிகளில் கரும்புகை பரவியதால் பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்து அங்கு விரைந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத்துறையினர் ரயில் இன்ஜின் மற்றும் பெட்டி இடையே ஏற்பட்ட தீயை 1 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.