சென்னை: துபாய் செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் நேற்று இரவு 9:30 மணிக்கு சென்னை சா்வதேச விமானநிலையத்திலிருந்து புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் 169 பயணிகள் பயணம் செய்ய இருந்தனர். அவா்கள் அனைவரும் மாலை 6.30 மணிக்கெல்லாம் சென்னை விமானநிலையத்திற்கு வந்து, அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமானத்தில் ஏற தயாராக இருந்தனா்.
விமானத்தின் தலைமை விமானி, பயணிகளை விமானத்தில் ஏற்றுவதற்கு முன்னதாக, விமானத்தின் இயந்திரங்களை சரி பார்த்தார். அப்போது விமான இயந்திரத்தில் பாதிப்பு இருப்பது தெரிந்தது. இதையடுத்து பயணிகள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை. பின்பு விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து விமான பொறியாளர்கள் குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது, அவர்கள் வந்து விமான இயந்திரங்களை சரிபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நள்ளிரவு 11:30 மணி வரை விமானத்தை சரி செய்ய முடியவில்லை. எனவே மாலை 6.30 மணிக்கே வந்து காத்திருந்த பயணிகள், ஏா்இந்தியா அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் உடனடியாக விமானம் ரத்து என்று அறிவிக்கப்பட்டது. மேலும் விமானம் பழுது பாா்க்கப்பட்டு, இன்று புதன் கிழமை மாலை புறப்படும் என்று அறிவித்தனா்.