சென்னை: சென்னையில் இருந்து டெல்லி செல்ல இருந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக டெல்லி - சென்னை ஏர் இந்தியா பயணிகள் விமானம், டெல்லியில் காலை 5:50 மணிக்குப் புறப்பட்டு, காலை 8:50 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்து சேரும். அதே விமானம் மீண்டும் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து காலை 10:05 மணிக்கு புறப்பட்டு பகல் ஒரு மணிக்கு டெல்லி சென்றடையும்.
ஆனால், இன்று(ஜூலை 24) இந்த ஏர் இந்தியா விமானம் காலையில் டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையம் வரவில்லை. நிர்வாக காரணங்களால் அந்த விமானம் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதை அடுத்து, சென்னையில் இருந்து இன்று காலை 10:05 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அந்த விமானத்தில் சுமார் 140 பயணிகள் டெல்லி செல்ல முன்பதிவு செய்திருந்ததாகத் தெரிகிறது. அந்தப் பயணிகளுக்கு விமானம் ரத்து என்ற தகவல் இன்று அதிகாலையில் தெரிவிக்கப்பட்டது. அதோடு அந்தப் பயணிகள் மாற்று விமானங்களில் டெல்லி செல்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் அண்மைக்காலமாக விமானங்கள் ரத்து செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. பல்வேறு காரணங்களால் விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதிலும் குறிப்பாக கடந்த ஓரிரு மாதங்களில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்த காரணத்தினால் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.