தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை-பெங்களூரு பசுமை வழிச்சாலை திட்டம் - ஒப்பந்தம் வெகு விரைவில் - நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்

சென்னை-பெங்களூரு பசுமை வழிச்சாலை திட்டம், 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், இதற்கான ஒப்பந்தம் வெகு விரைவில் கோரப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது

chennai
தேசிய நெடுஞ்சாலை துறை

By

Published : Aug 26, 2021, 2:32 PM IST

சென்னை-பெங்களூரு சாலை ஏற்கனவே 360 கி.மீ., தூரத்தில் உள்ளது. எனினும் தூரம் மற்றும் பயண நேரத்தைக் குறைக்க 260 கிமீ தூரம் கொண்ட நான்கு வழி பசுமை வழிச்சாலை கொண்ட திட்டத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறை 1,300 கோடி ரூபாய் செலவில் திட்டமிட்டு அதற்கான வரைவு திட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளது.

மேலும், இந்தச் சாலையில் வாகனங்கள் 120 கி.மீ., வேகத்தில் செல்லலாம் எனவும் அதற்கான முறையில் சாலை பணிகள் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சாலையானது தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கி ஆந்திராவில் உள்ள சித்தூர் வழியாக சென்று கர்நாடகாவின் ஹோஸ்கோட் என்ற பகுதியில் நிறைவடைகிறது.

மூன்றரை மணி நேரத்தில் பெங்களூரு

தற்போது சென்னையிலிருந்து பெங்களூருவுக்குப் பயணம் செய்ய 5 முதல் 6 மணி நேரம் ஆகிறது. இந்த திட்டம் நிறைவேறினால், விரைவாக 3 மணி 30 நிமிடங்களில் பெங்களூரை அடைந்துவிட முடியும் என்கிறார்கள் நெடுஞ்சாலை துறை அலுவலர்கள்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "முதலில் இந்தத் திட்டத்திற்காக நிலம் கையாளுதலில் பிரச்னை இருந்தது. இருப்பினும் போதுமான நிலத்தை கையகப்படுத்தியுள்ளோம்.

சென்னை-பெங்களூரு பசுமை வழிச்சாலை திட்டம்

இரண்டாவதாக சுற்றுச்சூழல் சான்றிதழ் வாங்குவதில் பெரும் சிக்கல் நீடித்துவந்தது. ஏனெனில் இந்தப் பாதையில் பெரும்பாலான மரங்கள் உள்ளன. இவற்றை அகற்றுவதில் இன்னும் பிரச்னை உள்ளது.

மரங்களை வெட்டாத வரைபடம்

மேலும் 20க்கும் மேற்பட்ட குளம், குட்டைகள் , நீர்வள ஆதாரங்கள் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாதிக்கப்படுவதால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழல் சான்றிதழ் வழங்க மறுத்தது. எனினும் மரங்களை வெட்டாத அளவிற்கு வரைபடத்தைத் தயாரித்துள்ளோம்" என்றார்.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குநர் டி. மோகன் (காஞ்சிபுரம் மண்டலம்) நம்மிடம் தொலைபேசி வாயிலாக கூறுகையில், "இந்தச் சாலை திட்டம் ஆரம்பக் கட்டத்தை நெருங்கியுள்ளது.

6 மாதத்தில் கட்டுமான பணி

மேலும் நிலம் கையாளுதல் மற்றும் சுற்றுச்சூழல் சான்றிதழ் உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தன. தற்போது 90 விழுக்காடு பணிகள் முடிந்து ஒப்பந்தம் கோர உள்ளோம். அதன் பிறகு 6 மாதங்களில் கட்டுமான பணிகள் தொடங்கும்" என கூறினார்.

மறுபுறம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இந்தத் திட்டத்தை நிறைவேற்றினால் எந்த ஒரு மரத்தையும் அகற்றக்கூடாது. மேலும் மக்களின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் இத்திட்டம் இருக்கக்கூடாது என வலியுறுத்துகிறார்கள்.

பூவுலகின் நண்பர்கள்

மேலும், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சூழலியல் பொறியாளர் வீ.பிரபாகரன் கூறுகையில், " இந்த திட்டத்தை நிறைவேற்றினால் நீர் வள ஆதாரங்கள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். சூழலியல் தாக்கம் அதிகமாக உள்ளதாக உணரப்படுகிறது.

மக்களிடம் கருத்து கேட்கப்பட வேண்டும். வாழ்வாதாரத்தை அழிக்கக்கூடிய எந்த ஒரு வளர்ச்சி திட்டமும் நமக்கு தேவையில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஜெ. பல்கலை விவகாரத்தில் திமுக காழ்ப்புணர்ச்சி - அதிமுக வெளிநடப்பு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details