சென்னை: கடந்த 2013ஆம் ஆண்டு, 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகள் தொடங்கப்பட்டன. இந்தத் திட்டத்திற்காக மத்திய-மாநில நெடுஞ்சாலைத்துறையினர் முழு மூச்சாக பணியில் இறங்கினர். எனினும் நிலம் கையகப்படுத்துதல், பொது மக்களின் எதிர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியாத சூழல் உருவானது.
இந்தத் திட்டத்தின்படி தற்போதுள்ள நான்கு வழி சாலையை ஆறு வழி சாலையாக மாற்ற வேண்டும். அதுமட்டுமல்லாது சென்னை, பாடியில் தொடங்கும் இந்தச் சாலையானது, அம்பத்தூர் வழியாக திருப்பதி நகரப்பகுதிக்கு முன்னரே முடிவடைகிறது. பாடியிலிருந்து சாலை விரிவாக்கப்பணி தொடங்குவதால், மாநில நெடுஞ்சாலைத் துறை 24 கிமீ தூரத்திற்கு இப்பணியை மேற்கொள்ள உள்ளது.
இந்தத் திட்டத்தை 2009ஆம் ஆண்டு அப்போது மத்திய போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த டி.ஆர். பாலு கொண்டுவந்தார். ஆனால் பாடி முதல் திருநின்றவூர் வரை உள்ள வியாபாரிகள், குடியிருப்போர் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனையடுத்து இத்திட்டத்தை நெடுஞ்சாலைத் துறை கையில் எடுத்தது. எனினும் திட்டத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.