ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், சரஸ்வதி நகர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் கார் ஓட்டுநர் சாகுல் அமீது (வயது 38). இவரது மனைவி நிஷா (வயது 32). கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி நிஷா வீட்டிற்கு, அவரது தம்பி முறையான தமிம் அன்சாரி (வயது 30) என்பவர், குடும்பத்துடன் சென்றுள்ளார்.
பின்னர், இரு குடும்பத்தினரும் அதே பகுதியில் உள்ள தங்களது உறவினர் குழந்தையின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளனர். தொடர்ந்து நிகழ்ச்சி முடிந்து நிஷா வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது, பீரோவில் இருந்த 10 சவரன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து இது குறித்து நிஷா திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.