மத்திய கிழக்கு நாடான லெபனானில் இரு தினங்களுக்கு முன்பு 2ஆயிரத்து 450 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு உலக நாடுகள் இரங்கல் தெரிவித்தது. இந்நிலையில், சென்னை துறைமுகத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 746 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட்டை வேதி கிடங்கில் வைத்திருப்பதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து நேற்று (ஆக. 6) மத்திய, மாநில அரசு அலுவலர்கள் அமோனியம் நைட்ரேட் இறக்குமதி செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர். பின்னர், அமோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக இருப்பதாகவும், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஏல நடவடிக்கை முடிந்துவிட்டதாகவும் சுங்கத் துறை தெரிவித்தது. மேலும் இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவில் குடியிருப்புகள் இல்லை என்றும் சுங்கத் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை மணலியில் அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் தமிழ்நாடு அரசு தெரிவித்த தகவலின் அடிப்படையில் வாரியத்தின் இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் மலையாண்டி தலைமையில் மூன்று அலுவலர்கள் மற்றும் தீயணைப்புத் துறை இயக்குநர் , துணை இயக்குநர் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ஆகியோர் கொண்ட குழு நேரில் ஆய்வு செய்து அரசிற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது.
அறிக்கையின்படி அம்மோனியம் நைட்ரேட் தற்போது வைக்கப்பட்டிருக்கும் இடமானது பல ஏற்றுமதி இறக்குமதியாளர்களின் கண்டெய்னர்களை வைக்கும் கிடங்காகும். இந்த கிடங்கிலிருந்து 700 மீட்டர் தொலைவில் உள்ள மணலி டவுனில் 7ஆயிரம் பேரும், சடையான்குப்பத்தில் 5000 பேரும் என மொத்தமாக 12,000 பேர் வசிப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால், இது சுங்கத்துறை அளித்த விளக்கத்திற்கு நேரெதிராக உள்ளது.